ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால் தான் 6 முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் சீமான் ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராவதாக கூறி தன் வழக்கறிஞர்கள் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை நாதகவினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். சம்மனை கிழித்தவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டுள்ளார்.