சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியில் 95 இருக்கைகளுடன் கூடிய டோம் தியேட்டர் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டோம் தியேட்டரை பொறுத்தவரை 360 டிகிரிகளில் திரை அமைக்கப்படும். இதுபோன்ற திரையரங்குகள் வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது சேலத்தில் உருவாக உள்ளது. இது சினிமா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டோம் தியேட்டர்:

தியேட்டர் என்றால் அனைவருக்கும் தெரிந்தது நாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு திரையில் படம் ஒளிபரப்பப்படும். ஆனால் டோம் தியேட்டர் என்பது 360 டிகிரிகளில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகளை முழு வட்ட வடிவில் திரை அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இதுபோன்ற இருக்கைகளுடன் கூடிய டோம் திரையரங்குகள் வெளிநாடுகளில் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது சேலத்திலும் வந்துள்ளது. குறிப்பாக, இந்த டோம் தியேட்டர் திரைப்படத்தை பார்ப்பது மட்டுமின்றி திரையில் ஒளிபரப்பப்படும் காட்சிகளுக்கு ஏற்றது போல இருக்கை அசைவு உள்ளிட்ட அனைத்தையும் தத்துரூபமாக வடிவமைக்கப்படுகிறது.

சேலத்தில் டோம் தியேட்டர்:

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனம் இந்த டோம் தியேட்டர் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் டோம் தியேட்டரை முதன் முதலில் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தது. ஆனால் அதில் இருக்கைகள் இல்லை. 360 டிகிரியில் திரை அமைக்கப்பட்டு அனிமேஷன் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சேலத்தில் உருவாக உள்ளது இருக்கைகளுடன் கூடிய டோம் தியேட்டர் ஆகும்.

டோம் தியேட்டருகான வடிவமைப்பு மற்றும் ப்ளூ பிரிண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ப்ளூ பிரிண்டில் 95 இருக்கைகள், முழு குளிர்சாதன வசதியுடன் கூடிய வட்ட வடிவிலான தியேட்டர் கட்டுமானம் உருவாக்கப்பட உள்ளது. டோம் தியேட்டர் அமைக்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் மட்டுமே தகவல் பரவி வருகிறது. இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி:

டோம் தியேட்டர் உருவாகி வருவதாக வெளியாகி உள்ள தகவலை சேலத்தில் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக டோம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் படங்கள், அறிவியல் சார்ந்த படங்கள் மற்றும் ஃபேஸ் படங்கள் காட்சிப்படுத்தப்படும். பல வெளிநாடுகளில் மட்டுமே இருக்கக்கூடிய டோம் தியேட்டர் தற்போது சேலத்தில் வர இருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.