ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிய போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத்தை சந்தித்து இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகள் பெற்று 0.647 என்ற நெட் ரன் ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் விளையாடி அதில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் 1.2 என்ற நெட் ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி இந்தியா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே ஆடி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இனி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு முன்னேறுவது மிக மிக கடினமான விஷயமாக மாறி இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. வங்கதேச அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தால் அத்துடன் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு 100 சதவீதம் உறுதியாகி விடும். நியூசிலாந்து அணி அடுத்து தனக்கு இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.
வங்கதேச அணி அடுத்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பை பெறலாம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவாகவே உள்ளன. வங்கதேச அணி பலமிழந்து காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணி தற்போதைய சூழ்நிலையில் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்து அணி தனக்கு இருக்கும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வி அடைய வேண்டும். அடுத்து வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.
அப்போது பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரை இறுதி செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், நியூசிலாந்து அணி தற்போது அதிக நெட் ரன் ரேட் வைத்திருப்பதால் இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.