ARTICLE AD BOX
CSK: கேப்டனாக மாறும் தல தோனி.. மும்பைக்கு எதிராக களமிறங்கினால்.. இது நடந்தே தீரும்!
சென்னை: 18வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22ஆம் தேதியில் இருந்து அதாவது வரும் சனிக்கிழமையில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் போருக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள்தான். இந்த முறை இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும்போது அரங்கம் அதிர சம்பவம் ஒன்று நடைபெறவுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை எல் கிளாசிகோ எனக் கூற முக்கிய காரணமே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது களத்திலும் களத்திற்கு வெளியேயும் அனல் பறக்கும். கமெண்டரியிலும் கூட அது எதிரொலிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். ஆனால் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டால், எதிரணி மும்பை இந்தியன்ஸ் அணி என்றால் சந்தேகமே வேண்டாம், கோப்பை மும்பை அணிக்கு தான் என எழுதி வைத்துவிடலாம் எனக் கூறும் அளவிற்கு, மும்பை அணியின் ஆட்டம் இருக்கும். மும்பை அணியை நினைத்து சென்னை அணி வீரர்களே பயந்துள்ளார்கள். ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும். இது தொடர்பாக பல வீடியோக்கள் இணையத்தில் இப்போதும் உலா வருகிறது.

மும்பை இந்தியன்ஸ்: சரி, விஷயத்திற்கு வருவோம், இம்முறை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக்கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று அதாவது மார்ச் 19ஆம் தேதி ஆன்லைனில் விற்றுத் தீர்ந்து விட்டது.

சி.எஸ்.கே: இந்த போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதால், சென்னை அணிக்கு ரசிகர்கள் ஆதரவு என்பது பலமாகவே இருக்கும். ஆனால் சென்னை அணியை, அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவதில் மும்பை அணிக்கு கை வந்த கலை எனலாம். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியின் கரங்களே ஓங்கி இருந்தாலும், இம்முறை சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் மும்பை வீழ்த்த போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல தோனி: ஐபிஎல் போட்டியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால், அது சென்னை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது டி.ஜே. பாடலை ஒலிக்கச் செய்வதுதான். வீரர்களின் ஆட்டத்தை மையமாக கொண்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இப்படி இருக்கும்போது தோனிக்கு கடந்த ஆண்டு, ரஜினிகாந்தின் பல பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு, தோனி களமிறங்கும் போது கட்டாயம் ஒரு பாடல் ஒலிபரப்படுவது உறுதி.

கேப்டன்: அதாவது, கேப்டன் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ' நீ பொட்டு வெச்ச தங்க குடம்' பாடல், தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒலிபரப்பட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரத்திற்கு இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த பாடல் இணையத்தில் செம டிரெண்ட் ஆனது. இப்படி இருக்கும்போது மும்பை அணிக்கு எதிராக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினால், அவருக்கு கட்டாயம் இந்த பாடல் ஒலிபரப்பப்படும் என உறுதியாக கூறலாம். இதனால் தல தோனி களத்தில் மீண்டும் கேப்டனாக வலம் வரப்போகிறார்.