ARTICLE AD BOX
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 43 வயதான நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாட முடிவு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில், அவரால் முழு அளவில், முழு திறனுடன் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எப்போதும் போல உள்ளது. அவரும் எப்போதும் போல அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் வலை பயிற்சியில் ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு தோனிக்கு முழங்காலில் ஒரு பிரச்சனை இருந்தது. அதனால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. அவரால் அதிக ரன்கள் ஓட முடியவில்லை என்பதால் சிக்ஸர்கள் அடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

இந்த முறையும் கிட்டத்தட்ட அதே போன்று அதிரடி பாணி ஆட்டத்தை தான் ஆடுவார் எனக் கூறப்படுகிறது. அவரால் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்ய முடியாது. ஆனால், இரண்டு ஓவர்கள் நின்றாலும் முடிந்தவரை சிக்ஸர்களை அடிப்பார். அதற்கான பயிற்சியில் தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறார் தோனி.
தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்தி வரும் பயிற்சி முகாமில் தோனி பங்கேற்று இருக்கிறார். அதில் அவருக்கு வீசப்பட்ட ஷார்ட் பந்து ஒன்றை தூக்கி சிக்ஸ் அடித்தார். அதை சிஎஸ்கே அணியின் ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அது வேகமாக பரவி வருகிறது.
சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் தோனியின் சிக்ஸர்களை போட்டியில் பார்க்க வேண்டும் என இப்போதே தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், தோனி இதேபோல ஆடினால் நிச்சயம் எதிரணிகள் அவருக்கு எதிராக மட்டுமே தனியாக வியூகத்தை வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
IPL 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து திடீரென்று வெளியேறிய தோனி.. மனைவியுடன் சென்றார்.. காரணம்?
43 வயது வீரருக்கு எதிராக தனியாக ஒரு அணி வியூகம் வகுக்க வேண்டும் என்றால் அவரது திறன் எந்த வகையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம் எனவும் சிலாகித்து வருகின்றனர். இவை அனைத்தும் மீண்டும் ஒரு முறை நடைமுறையில் நடக்க வேண்டும். அதுவே சிஎஸ்கே ரசிகர்களின் ஆசை.