<p style="text-align: justify;">சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 2 யானை தந்தத்தை ₹1 கோடிக்கு விற்க முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.</p>
<p style="text-align: justify;">சேலத்தில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தெற்கு வனசரகர் துரைமுருகன் தலைமையில் 15 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சேலம் புதிய பேருந்து நிலையத்தில் யானை தந்தம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. உடனே சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற தனிப்படையினர், அங்கு சந்தேகம்படும் படி இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தினர். அதில் அவர்கள் யானை தந்தத்தை விற்க வந்ததும், யானை தந்தம் கருமந்துறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து வனத்துறை கருமந்துறைக்கு சென்று ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தத்தை பறிமுதல் செய்தனர். இந்த யானை தந்தம் விற்பனையில் 8 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.</p>
<p style="text-align: justify;">அதில், அவர்கள் கருமந்துறையை சேர்ந்த முரளி, சங்கர், பாலு, சக்திவேல், ஜெகநாதன், ராஜீவ்காந்தி, கிருஷ்ணன், இளங்கோவன் என்பதும், இந்த கும்பல் யானை தந்தத்தை வாட்ஸ் அப் குழு மூலம் ₹1 கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து விசாரணையில், யானை தந்தத்தை கேரளாவில் இருந்து முரளி, கடந்த வாரம் ரயிலில் கடத்தி வந்ததும், சேலம் ஜங்சனில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்தில் யானை தந்தத்தை கருமந்துறைக்கு கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">2 தந்தத்தையும் ₹1 கோடிக்கு விற்க முயன்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 8 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 7 செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கேரளாவில் இருந்து ரயில் மூலமாக சேலத்திற்கு யானை தந்தங்களை கொண்டு வந்துள்ளனர். இவர்களே யானையை கொன்று தந்தத்தை கடத்தி வந்தார்களா? அல்லது கேரளாவில் யாரிடமாவது தந்தத்தை வாங்கி வந்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>