ARTICLE AD BOX
Coolie: ரஜினியின் கூலி படத்தில் விஜய்யின் கடைசி பட நாயகி.. மாஸான போட்டோவை இறக்கிய படக்குழு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 171 வது படமான கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இருந்து படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. இடையில் ரஜினிகாந்த்திற்கு அறுவை சிகிச்சை எல்லாம் செய்யப்பட்டதால், படப்பிடிப்பு மிகவும் ஸ்லோவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து அப்டேட்டுகள் கதாபாத்திரங்களின் பெயர்களுடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கிறோம் என்றால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு காலில் சலங்கை கட்டி விட்டத்தைப் போல் இருக்கும் எனக் கூறலாம். மற்ற நடிகர்களின் படங்களை தயாரிக்கும் போது இருக்கும் ஆர்வமும் குஷியும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை தயாரிக்கும் போது பல மடங்கு உயர்ந்து விடுகிறது எனக் கூறலாம். தற்போது கூலி படத்திற்கே பல நூறு கோடிகளை நடிகர்களின் சம்பளத்திற்கு கொடுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தயாரிப்பிற்காக இன்னும் பல நூறு கோடிகளை இறக்க ஆர்வமாகவும் தயாராகவும் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் படம் கட்டாயம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கும் என கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து சிக்கிட் வைப் என்ற சிறிய பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் இப்போதும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
பூஜா ஹெக்டே: இந்நிலையில் கூலி படத்தில் நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார் என்ற தகவல் ஏற்கனவே உலா வந்தது. இந்த தகவல் உலா வரும்போது, அந்த நடிகை பூஜா ஹெக்டே தான் எனவும் கூறப்பட்டது. இப்படியான நிலையில்தான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ள அந்த நடிகை யார் என்ற தகவலை இன்று அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி சொல்லப் போவதாக படக்குழு தெரிவித்தது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உலா வந்த தகவலை போல் அது பூஜா ஹெக்டே தான் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஜன நாயகன்: பூஜா ஹெக்டே தற்போது விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஜா ஹெக்டே கூலி படக்குழுவினருக்கு டேட் கொடுத்து, நடித்தும் கொடுத்துள்ளார். இது லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே வந்து நடனமாடுவது போல் இருக்காது. கட்டாயம் அந்த பாடலில் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒற்றுமை: கூலி படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல் ஜன நாயகன் படம் அக்டோபரில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்தது. ஆனால் படத்தின் தன்மை விஜய்யின் அரசியலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதால், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது. இரண்டு படத்திலும் இருக்கும் ஒற்றுமைகள் என்றால் ஒன்று இசையமைப்பாளர் அனிருத் மற்றொன்று நடிகை பூஜா ஹெக்டே.