சென்னை: ஐடி சேவை துறையில் பிரபல காக்னிசண்ட் நிறுவனம் சென்னை சிறுசேரியில் ஏஐ கற்றல் மையத்தை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐடி நிறுவனமான காக்னிசண்ட் சென்னை சிறுசேரியில் இருக்கும் தங்களுடைய நிறுவனங்களாகத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் Immersive learning center என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கற்றல் மையத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஒரு லட்சம் தனிநபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் இந்த மையம் இருக்கும் என காக்னிசண்ட் தெரிவித்துள்ளது.

சிறுசேரியில் காக்னிசண்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக தற்போது 50 ஏக்கர் பரப்பளவிலான வளாகம் இருக்கிறது. இந்த வளாகத்திற்குள் 14 ஏக்கர் பரப்பளவில் இந்த செயற்கை நுண்ணறிவு கற்றல் மையம் அமைக்கப்பட இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இந்த கற்றல் மையத்தில் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் தனி நபர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும் 14,000 இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் இன்குபேட்டர் ஹப்புகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர இங்கே வந்து பயிலக்கூடிய நபர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என காக்னிசண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை மட்டுமில்லாமல் ஐதராபாத், கொச்சி , கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய தங்களுடைய வளாகங்களிலும் இதே போன்ற கற்றல் மையங்கள் அமைக்கப்படும் என காக்னிசண்ட் நிறுவனம் கூறியுள்ளது. Hub and spoke மாடல் என்ற அடிப்படையில் இது திட்டமிடப்பட்டிருப்பதாக காக்னிசண்ட் நிறுவனம் கூறியுள்ளது. சிறுசேரியில் அமைக்கப்படக்கூடிய இந்த கற்றல் மையம் புதிய பட்டதாரிகளுக்கான பூட் கேம்ப்களாகவும் இயங்கும் என காக்னிசண்ட் நிறுவனம் கூறியிருக்கிறது.
பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வியாளர்கள் இங்கே வந்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள் என சொல்லபப்டுகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆதிக்கம் மிகுந்த ஒரு உலகத்திற்குள் நாம் நுழையும் போது அந்த துறையில் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை என காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காக்னிசண்ட் நிறுவனம் தங்களுடைய கவனத்தை தற்போது பெருமளவில் ஜெனரேட்டிவ் ஏஐ பக்கம் திருப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 2,77,000 ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. இவர்களில் 1, 68,000 பேர் செயற்கை நுண்ணறிவுக்கான ஜெனரேட்டிவ் படிப்புகளை முடித்து சான்றிதழ் பெற்று இருக்கிறார்கள.
உலக அளவில் காக்னிசண்ட் நிறுவனம் 3,36,800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் ,டெல்லி, ஐதராபாத், கொச்சின், கொல்கத்தா, மும்பை என பல்வேறு நகரங்களிலும் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்படுகின்றன .