ARTICLE AD BOX

மத்திய அமைச்சரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பாஜக எம் பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி மசோதா குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மசோதாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கொண்டு வந்த திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்த மசோதாவின் இறுதி அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சபாநாயகர் ஓம் பிர்ல்லாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.