ARTICLE AD BOX
குரூப் ஏ பிரிவில் இருந்து வெறும் இரண்டு லீக் போட்டிகளின் முடிவிலேயே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தன. இது கிரிக்கெட் ரசிகர்களிடம் “என்னபா இப்படி சுவாரசியமே இல்லாம முடிஞ்சிடுச்சே” என்ற சலிப்பையே ஏற்படுத்தியது.
ஆனால் ”இந்த கௌசிக் குறுக்க வந்தா” என தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் குறுக்கே வந்த மழை, குரூப் பி பிரிவில் இரண்டு மடங்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
”அவன்தான் டா பெரிய வேலைய பார்த்துட்டு போய்ட்டான்” என்ற வசனத்திற்கேற்ப போட்டி ரத்தாகி புள்ளிப்பட்டியலையே தலைகீழாக மாற்றிய மழை, முதலில் “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்” என 4 அணிகளுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பிற்கான கதவை திறந்துவிட்டது.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியிருப்பது, அரையிறுதி வாய்ப்பில் இன்னும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பு..
மீதமிருக்கும் இரண்டு முக்கியமான லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் வென்றால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும், ஒருவேளை தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் கடைசி லீக் போட்டியில் தோற்றால் என்னவாகும்?
தோற்றால் கூட இரண்டு அணிகளுக்கும் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. இந்த அரையிறுதிக்கான ரேஸில், நெட் ரன் ரேட் எனப்படும் NRR மிகப்பெரிய பங்களிப்பை பெறப்போகிறது.
ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தையும் வீழ்த்தினால் எந்த NRR-ம் தேவைப்படாது, புரோட்டீஸ் (தென்னாப்பிரிக்கா) மற்றும் ஆஸி இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும்.
ஒருவேளை இரண்டு அணிகளும் கடைசி லீக் போட்டியில் தோற்றால், அவர்களுடைய NRR-ஐ பொறுத்தே இரண்டு அணிகளில் ஒன்று அரையிறுதியை சீல் செய்யும்.
தற்போதைய புள்ளிப்பட்டியலின் படி தலா 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சமநிலையில் இருக்கின்றன. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி +2.140 நெட் ரன்ரேட் உடன் வலுவான நிலையில் இருக்கிறது, ஆஸ்திரேலியா அணி +0.475 நெட் ரன்ரேட் உடன் சற்று பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
இந்த சூழலில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் கூட, மிகப்பெரிய தோல்வியை சந்திக்க கூடாது. அதேபோல தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்திடம் தோற்றால் மிகப்பெரிய தோல்வியை தழுவக்கூடாது.
ஒருவேளை ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்று, தென்னாப்பிரிக்கா அணி மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்து ஆஸ்திரேலியாவை விட NRR கீழே போனால், தென்னாப்பிரிக்கா அணி தொடரை விட்டே வெளியேறும். இதற்கெல்லாம் மேலாக இரண்டு போட்டிகளும் மழையால் நடக்காமல் போனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கும் வாய்ப்பு முழுவதுமாக அடைக்கப்படும்.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் அரையிறுதி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் வென்றாலும், தோற்றாலும் கூட அரையிறுதி, மழை குறுக்கிட்டால் அரையிறுதி என பல சுவாரசியங்கள் குரூப் பி பிரிவில் ஏற்பட்டுள்ளது.
இருக்கும் 5 வாய்ப்புகள்?
1. ஆப்கானிஸ்தான் தகுதி பெற என்ன தேவை?
ஆப்கானிஸ்தான் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்வது மட்டுமே ஒரே வாய்ப்பு. ஒருவேளை அப்போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
2. ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற என்ன தேவை?
ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை அப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றால், ஆஸ்திரேலியாவின் NRR-ஐ விட குறையும் அளவிலான தோல்வியை தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் பெறவேண்டும்.
3. தென்னாப்பிரிக்கா தகுதி பெற என்ன தேவை?
ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் தோற்றால் கூட தானாகவே தகுதி பெறும். ஒருவேளை ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வெல்ல வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் NRR ஆஸ்திரேலியாவை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்று, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் என்ன நடக்கும்?
ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதிபெறும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் நல்ல NRR வைத்திருக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
5.மழையால் இரண்டு போட்டிகளும் தடைபட்டால்?
இரண்டு போட்டிகளும் மழையால் ரத்தானால் தலா 4 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும், ஆப்கானிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் முடிக்கும்.