
பிப்ரவரி 24, சென்னை (Chennai News): ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் எந்த ஒரு ராசியில் சேர்க்கை பெற்றாலும் புனர்பூ தோஷம் ஏற்படும். சந்திரனும், சனியும் ஒருவருக்கொருவர் நேர் எதிரில் நின்று சம சப்தமாக பார்த்தாலும் புனர்பூ தோஷம் ஏற்படும். சந்திரன் வீட்டில் சனி நின்று, சனி வீட்டில் சந்திரன் நின்று இருவரும் பரிவர்த்தனை பெற்றாலும் புனர்பூ தோஷம் என்று சொல்ல வேண்டும். புனர்பூ தோஷம் என்றால் ஏன் எல்லோரும் அச்சப்படுகிறார்கள்? புனர்பூ தோஷம் என்ன கெடு பலன்களை ஜாதகருக்குக் கொடுக்கும் என்று பார்ப்போம்.
புனர்பூ தோஷம்:
சந்திரன் ஒளிக் கிரகம். சனி இருள் கிரகம். இருவரும் சேர்க்கை பெறும் போது, ஜாதகரின் மன வலிமை குறையும். ஜாதகருக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். சந்திரன் மனோகாரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகர் குழப்பவாதியாக இருப்பார். முடிவு எடுப்பதில் சிரமப்படுவார். சந்திரன் மாத்ரு காரகன் என்பதால், ஜாதகரின் தாய்க்கு பாதிப்புகள் சந்திர தசையில் ஏற்படலாம். தாய்க்கும், ஜாதகருக்கும் பிரச்சினை ஏற்படலாம். தாயினால் ஜாதகருக்கு அனு கூலம் இல்லாமல் போகலாம். தாயின் அன்பு கிடைக்காமல் போகலாம். தாயிடமிருந்து பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். மேலும் சனி, சந்திரன் இருவரும் சேர்க்கை பெற்றிருக்கும் போது, ராசிக்கு 7 ஆம் வீட்டை சனி பார்ப்பார் என்பதால் ஜாதகருக்கு திருமணம் தாமதப்படலாம். சனி தசையில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஜாதகருக்கு ஏற்படக் கூடும்.
புனர்பூ தோஷம் யாருக்கு பாதிக்கும், யாருக்கு பாதிக்காது, பாதிக்கும் என்றால் எவ்வளவு பாதிக்கும், எப்பொழுது பாதிக்கும் என்பதை அறிய, லக்னம், சனியின் வலிமை, சந்திரனின் வலிமை, தசா புக்திகள் இவற்றை ஆராய வேண்டும். பொதுவாக, சுக்கிர அணி லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு சனி பகவான் யோக கிரகமாகும்.
குரு அணி லக்னங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு சந்திரன் யோக கிரகம் ஆகும்.
குரு அணி லக்ன ஜாதகருக்கு சந்திரனும், சனியும் சேர்க்கை பெற்று சந்திர தசை நடந்தால் யோக பலன்கள் குறையும். சுக்கிர அணி லக்ன ஜாதகருக்கு சந்திரன் வளர்பிறை சந்திரனாகவோ, பவுர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரனாகவோ அல்லது பவுர்ணமி சந்திரனாகவோ இருந்தால் சனி தசையில் யோக பலன்கள் கூடுதலாக நடக்கும். அதே போல் சனியுடனும் சந்திரனுடனும் குரு அல்லது சுக்கிரன் தொடர்பு பெற்றாலும் யோக பலன்கள் நடக்கும். இந்த அமைப்புகளில் புனர்பூ தோஷம் புனர்பூ யோகமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சந்திரன் பவுர்ணமி சந்திரனாகவோ அல்லது பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனாகவோ இருக்கும் போது புனர்பூ தோஷம், பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. சனியையும் சந்திரனையும் குருவோ சுக்கிரனோ பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும். சனி, சந்திரனுடன் குருவோ சுக்கிரனோ சேர்க்கை பெற்றாலும் புனர்பூ தோஷம் நிவர்த்தி ஆகும். மேலும் சனிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பாகை வித்தியாசம் 13 பாகைக்கு மேல் இருந்தால் இருவரும் சேர்க்கை பெறவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, புனர்பூ தோஷம் தரும் பலன்கள் சனி தசையிலோ அல்லது சந்திர தசையிலோ தான் அதிகம் இருக்கும் என்பதை மறக்கக்கூடாது