ARTICLE AD BOX
Ashwath Marimuthu: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, 'ஓ மை கடவுளே’ படத்துக்குப் பின், 'டிராகன்' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த 'டிராகன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘டிராகன்’ படம் குறித்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எஸ்.எஸ். மியூசிக் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்தப்பேட்டியில், அடுத்ததாக அவர் சிலம்பரசனுடன் இணையப்போகும் எஸ்.டி.ஆர் 51 படம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
எப்போது ரிலீஸ் ஆகும்?
அதில் அவர் பேசும் போது, ‘சிலம்பரசன் உடன் நான் இணையும் படம் அடுத்த வருடம் திரையரங்கில் வெளியாகும். ‘ஓ மை கடவுளே’ படத்திற்கும் ‘டிராகன்’ படத்திற்குமிடையே 5 வருட இடைவெளி விழுந்திருக்கிறது. அப்படியானால் இந்தப்படத்திற்கு எவ்வளவு இடைவெளி விழும் என்று கேட்கிறீர்கள்.
2020ல் இருந்து 2022 வரை உங்களால் எதுவுமே செய்திருக்க முடியாது. காரணம், அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. ஆனால் அதற்கு நடுவிலும் கூட, நான் ஒரு தெலுங்கு படத்தை இயக்கி, அதை திரையரங்கில் வெளியிட்டும் விட்டேன். என்னுடைய இரண்டாவது திரைப்படமே சிலம்பரசனுடன்தான் செய்வதாக இருந்தது. அது மட்டுமல்ல, நான் பிற பெரிய நடிகர்களுடனும் கதை விவாதத்தில் இருந்தேன்.
ஆனால் நான் தெலுங்கில் பிசியாக இருந்த காரணத்தால், இங்கு உள்ள நடிகர்களுடன் என்னால் இணைய முடியவில்லை. தெலுங்கு படத்தை முடித்த பின்னர் சிலம்பரசன் உடன் இணையும் படத்திற்கான விவாதங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் தான் ‘டிராகன்’ படம் அமைந்தது. சிலம்பரசன் உடன் நான் இணையும் திரைப்படம் பட்ஜெட் அளவில் மிகப் பெரியது என்றாலும், நான் என்னுடைய முதல் குறும்படத்தை என்ன நோக்கத்தோடு எடுத்தேனோ அதே நோக்கம் தான் இந்த படத்திலும் இருக்கிறது.
‘காட் ஆப் லவ்’
அது என்னுடைய ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும். எஸ்.டி.ஆர் 51 படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காட் ஆப் லவ்’ என்பது படத்தினுடைய கேரக்டர். அது படத்தினுடைய டைட்டில் கிடையாது. இந்தத் திரைப்படம் சிம்புவின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் திரைப்படமாகவும், சாமானிய ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் அடங்கிய திரைப்படமாகவும் அமையும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்த திரைப்படம் ஒரு ஃபேண்டஸி என்டர்டெய்னர். இதில் சிலம்பரசன் மன்மதனாக நடிக்கிறார்.
மோதிரம் ஒரு முக்கியமான விஷயம்
இந்த திரைப்படத்தில் மோதிரம் ஒரு முக்கியமான விஷயமாக வருகிறது. அதே போல அவர் காண்பிக்கும் சிம்பிள் உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக படத்தில் இருக்கும்.
சிலம்பரசனை பொறுத்தவரை அவர் உங்களை அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டார். ஆனால் ஒரு முறை நம்பி விட்டார் என்றால், உங்களை ஒரு சகோதரர் போல நடத்துவார். டிராகன் திரைப்பட புரமோஷனின் எல்லா இடங்களிலும், நான் கருப்பு கலர் சட்டையையே அணிந்து வந்தேன். உடனே அவர் என்னை தொடர்பு கொண்டு, நேர்காணலுக்கு கூட நீ ஒழுங்காக செல்ல மாட்டாயா? நல்ல ஆடைகளை அணிந்து, ஒழுங்காக செல் என்று கூறினார்.
திடீரென்று ஒரு நாள் எனக்கு போன் செய்த சிலம்பரசன், என்ன டிராகன் படத்தின் டிரைலரை நீ அனுப்பவே இல்லை.. அதுவும் நம்ம படம் தான் என்று கூறினார்..
அந்த படத்தின் டிரைலரை அவருக்கு அனுப்பியவுடன், அவர் நன்றாக இருக்கிறது என்றார். இன்னொரு வெர்ஷனை அனுப்புகிறேன் என்று சொன்ன போது, இதுவே நன்றாகத்தானே இருக்கிறது. பின்னர் ஏன் இன்னொன்று என்று சொன்னார். ஆனாலும் அனுப்பினேன். அதைப்பார்த்த அவர் இந்த ட்ரெய்லரில் நிறைய விஷயங்கள் வெளியே வருகின்றன. ஆனால் முன்னர் காண்பித்த ட்ரெய்லரில் விஷயங்கள் பெரிதாக வெளிப்படவில்லை என்று கூறினார். அதையே நாங்கள் வைத்துக்கொண்டோம்.
சிலம்பரசன் நண்பர் கிடையாது.
நான் சிலம்பரசனின் நண்பர் கிடையாது நட்பு என்பது மிகப்பெரிய விஷயம். நான் சிலம்பரசனின் ரசிகன். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் என்னை ஒரு சகோதரர் போல நடத்துகிறார். எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது; படம் நன்றாக செல்ல வேண்டும் என்ற ரீதியில் அவர் செயல்படுகிறார்.அவர் அருகில் இருந்து ஷூட் செய்யும் போது பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அவரை ஃப்ரேமில் பார்த்தபோது அப்படி இருந்தது. அந்த அளவுக்கு அவர் சக்தி வாய்ந்த மனிதராக ஃப்ரேமில் தெரிந்தார்’ என்று பேசினார்.

டாபிக்ஸ்