ARTICLE AD BOX
மனித குலம் பயனடைய உருவாக்கப்பட்ட AI நவீன தொழில் நுட்பம், மோசடி செய்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக உருவெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை உருவாக்கி, 53 வயதான பிரெஞ்சு நாட்டுப் பெண்மணியை 8,30,000 யுரோ ஏமாற்றியிருக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 7.40 கோடி.
ஆன்னே என்ற இந்தப் பெண்மணி, பிப்ரவரி 2023ஆம் வருடம் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு செய்ததை, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தாள். அதன் பிறகு அவளுக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. “என்னுடைய பெயர் ஜேன் எட்பா பிட். நான் பிராட் பிட்டின் தாயார்” என்று அறிமுகம் செய்து கொண்ட பெண், “என்னுடைய மகனுக்கு உன்னைப் போன்ற பெண் தான் வேண்டும்” என்றாள். அதன் பின்னர் ஆன்னேவுக்கு பிராட் பிட் என்ற பெயரிலிருந்து குறுஞ் செய்தி வந்தது. ஆன்னே, அந்த நபருடன் செய்தி பரிமாற்றம் செய்து கொண்டிருந்தாள்.
ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர் தன்னுடன் அடிக்கடி செய்தி பரிமாற்றம் செய்து கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. தன்னுடைய சந்தேகத்தை ஆன்னே வெளிப்படுத்தினாள். உடனே அவளுக்கு, பிராட் பிட்டின் பாஸ்போர்ட் நகல்கள், பிராட் பிட் மற்ற பிரபலங்களுடன் பகிர்ந்து கொண்ட குறுஞ் செய்திகள், (AI துணையுடன் உருவாக்கப்பட்ட) பிராட் பிட் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை வந்தன. தான் செய்தி பரிமாறிக் கொண்டிருப்பது பிராட் பிட்டுடன் என்று நம்பிய ஆன்னே, அந்த நபருடன் அடுத்த 18 மாதங்கள், தினந்தோறும் செய்திகள், கவிதைகள், காதலுணர்வுள்ள வாசகங்கள் என்று பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் பிராட் பிட் என்று சொல்லப்பட்ட அந்த நபர், அவளை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகரை மணந்து கொள்ளப் போகிறோம் என்று, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, கணவனை விவாகரத்து செய்தாள் ஆன்னே. அவளுக்காக விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் வாங்கியுள்ளதாக மோசடி நபர்கள் செய்திகள் அனுப்பினர். ஆனால், பிராட் பிட், தான் விவாகரத்து செய்த ஆஞ்சலினா ஜோலியுடன் உள்ள சட்டச் சிக்கலினால், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு சுங்க வரி கட்டுவதற்கு 9000 யுரோக்கள் தேவையென்றும் ஆன்னேவுக்கு செய்திகள் அனுப்பினார்கள்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, பிராட் பிட் சிறுநீரக கேன்சரால் அவதிப்படுவதாகவும், மருத்துவச் செலவுக்கு 60,000 யுரோக்கள் தேவைப்படுகிறதென்றும் செய்தி வந்தது. ஆன்னே, பணத்தை அவர்கள் சொல்லிய துருக்கி வங்கிக் கணக்கிற்கு அனுப்பினாள். இவ்வாறு சிறுகச் சிறுக விவாகரத்து செய்து கிடைத்த 7,75000 யுரோக்களையும் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பினாள். இதற்கு மேல் கொடுக்கப் பணம் இல்லாததால், வீட்டிலிருந்த மரச்சாமான்கள் அனைத்தையும் விற்றுப் பணம் அனுப்பினாள் ஆன்னே.
பிராட் பிட்டின் பெண் சிநேகிதி பற்றி செய்தித் தாளில் படித்தப் பிறகுதான், ஏமாற்றப் பட்டோம் என்று உணர்ந்தாள் ஆன்னே. உடனே, மோசடிப் பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்ததாகப் புகார் மனு கொடுத்தாள் ஆன்னே. எல்லாவற்றையும் இழந்த ஆன்னே, ஒரு நண்பருடன் தங்கிக் கொண்டு, சட்டச் செலவுகளுக்காக ஆன்லைனில் மற்றவர்களுடன் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
இந்த மோசடி ஆன்னேவிற்கு பேரிடியாக இருந்தது. மூன்று முறை தற்கொலை முயற்சி செய்து, சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. ஆன்லைனில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது ஆன்னேயின் சோகக் கதை.