ARTICLE AD BOX
லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. அதன் மூலம் இந்தத் தொடரின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஆப்கானிஸ்தான் அணி தக்க வைத்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாடி உள்ளனர்.
அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதற்கு முன் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியபோது, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் முதல் மக்கள் வரை அனைவரும் அதை பெரிய அளவில் கொண்டாடினர்.

தற்போதும் அதே போன்ற கொண்டாட்டங்கள் ஆப்கானிஸ்தான் நகரங்களில் நடைபெற்றன. இந்த முறை வானவேடிக்கைகளை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். அதிக கட்டிடங்கள் நிறைந்த பகுதியில், தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு பல்வேறு பட்டாசுகளை வெடித்தும், வானவேடிக்கைகளை நிகழ்த்தியும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடி உள்ளனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொது இடங்களில் ஒன்று கூடிய ரசிகர்கள், அங்கு பல்வேறு சாகசங்களை செய்தும் இந்த வெற்றியை கொண்டாடி உள்ளனர். பலரும் வாகன அணிவகுப்பையும் நடத்தி உள்ளனர். இதை அடுத்து, ஒட்டுமொத்த காபூல் நகர வீதிகளும் இரவு நேரத்தில் ஜொலித்தன.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இன்னும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. முதல் வெற்றிக்கு இந்த அளவிலான கொண்டாட்டம் என்றால், ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறினால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
ஆப்கன் வெற்றியால் இந்திய அணிக்கு சிக்கல்.. அரை இறுதியில் மெகா ட்விஸ்ட் இருக்கு.. என்ன நடக்கும்?
சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற சர்வதேச தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டு அந்த நாட்டில் மிகப்பெரிய அலையை உருவாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் பி பிரிவு போட்டியில் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.