AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் பி பிரிவில் அரையிறுதிக்குச் செல்லப்போவது யார்? என்பதில் கடும் சவால் எழுந்துள்ளது.

தொடரை விட்டு வெளியேறப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐசிசி நடத்தும் மிகப்பெரிய தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் அதிர்ச்சி தந்துள்ளது. அதன் விவரங்களை கீழே காணலாம்.
1. இங்கிலாந்தை வீழ்த்தியது ( 2023 உலகக்கோப்பை)
2. பாகிஸ்தானை வீழ்த்தியது ( 2023 உலகக்கோப்பை)
3.இலங்கையை வீழ்த்தியது (2023 உலகக்கோப்பை)
4.நியூசிலாந்தை வீழ்த்தியது ( 2024 டி20 உலகக்கோப்பை)
5.ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ( 2024 டி20 உலகக்கோப்பை)
6. இங்கிலாந்தை வீழ்த்தியது ( 2025 சாம்பியன்ஸ் டிராபி)

2024 டி20 உலகக்கோப்பை நியூசிலாந்து:

கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அந்த போட்டியில் 160 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

2024 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா:

கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்திற்கு அதிர்ச்சி அளித்த கையோடு ஆஸ்திரேலிய அணிக்கும் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தந்தது. 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 127 ரன்களுக்கு சுருட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2024 டி20 உலகக்கோப்பை வங்கதேசம்:

ஆப்கானிஸ்தானை காட்டிலும் அனுபவம் மிக்க அணியாக திகழும் வங்கதேசத்தையும் கடந்த டி20 உலகக்கோப்பையில் தோற்கடித்தது. டிஆர்எஸ் விதிப்படி 114 ரன்கள் என்று களமிறங்கிய வங்கதேசத்தை 105 ரன்களுக்கு சுருட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.

2024 டி20 உலகக்கோப்பை அரையிறுதி:

சூப்பர் 8 சுற்றுகளில் ஜாம்பவான் அணிளுக்கு ஷாக் தந்து கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு ஆப்கான் முன்னேறியது. ஆனால், அந்த போட்டியில் 56 ரன்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாப்பிரிக்கா அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த தொடரில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது.

2023 உலகக்கோப்பை இங்கிலாந்து:

கடந்த 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் டெல்லியில் நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தந்தது. 285 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்திற்கு ஹாரி ப்ரூக் மட்டும் 66 ரன்கள் அடித்து போராட 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி தந்தது.

2023 உலகக்கோப்பை பாகிஸ்தான்:

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ், ஜட்ரான், ரஹ்மத் ஷா, ஷாகிதி பங்களிப்பால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2023 உலகக்கோப்பை இலங்கை:

முன்னாள் சாம்பியன் இலங்கையை கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. முதலில் ஆடிய இலங்கை அணி 241 ரன்களுக்கு அவுட்டானது. இதையடுத்து, ஆடிய ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ரஹ்மத் ஷா, ஷாகிதி, ஓமர்ஷாய் ஆகியோர் பேட்டிங்கால் 45.2 ஓவர்களிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்த அணியாக ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.