ARTICLE AD BOX
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு விண்வெளியில் இருந்து திரும்பியதால் இந்தியாவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுனிதா வில்லியம்ஸின் தந்தை பிறந்த குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தில் விழாக்கோலம் பூண்டது. சுனிதா திரும்பி வந்த சந்தோஷத்தில் நிறைய பேர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதால் சொந்த ஊரும் சந்தோஷத்தில் திளைத்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வரவேற்றார். இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.27 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு பூமிக்கு வந்தடைந்தனர்.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பினர்
அதே நேரத்தில், க்ரூ-9 தரையிறங்கிய பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர். கை அசைத்து, சிரித்த முகத்துடன் சுனிதா வில்லியம்ஸ் வெளியே வந்தார். நிக் ஹேக் பயணிகளில் முதல் ஆளாக வெளியே வந்தார். மூன்றாவது நபராக சுனிதா வெளியே வந்தார். பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு பயணித்த க்ரூ-9 டிராகன் விண்கலம் மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரைக்கு அருகில் அதிகாலை மூன்றரை மணிக்கு தரையிறங்கியது. ஸ்பேஸ் எக்ஸின் எம்வி மேகன் என்ற கப்பல் கடலில் இருந்து விண்கலத்தை மீட்டு பயணிகளை கரைக்குக் கொண்டு சேர்த்தது. இப்படியாக மாதக்கணக்கில் நடந்த மிஷனுக்குப் பிறகு க்ரூ 9 குழு பூமிக்குத் திரும்பியது.
செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு ஃப்ரீடம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது. நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்த விண்கலத்தில் வந்தனர். ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மிஷன் காலத்தை நீட்டிக்க வேண்டியதாயிற்று. இவர்கள் 9 மாத மிஷனை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?
2024 ஜூன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் சோதனை விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஐஎஸ்எஸ்(ISS)க்கு சென்றனர். மிஷன் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்டார்லைனரில் சுனிதா, புட்ச் ஆகியோரால் திரும்ப முடியாமல் போனது. போயிங், நாசா இருவரும் சேர்ந்து விண்கலத்தை தரையிறக்கினர்.