ARTICLE AD BOX
7 வாரத்தில் ரூ.9,506 உயர்வு.. நான் ஸ்டாப்பாக உயரும் தங்கத்தின் விலை.. இதுதாங்க விஷயம்..
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நடுத்தர மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமானிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறி விடுமோ என்ற கவலை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புகள்,ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப நம் நாட்டிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து ஏழாவது வாரமாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து 8வது வாரமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்த 7 வாரங்களில் (10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.9,506 உயர்ந்து ரூ.86,020ஆக அதிகரித்துள்ளது. ஏழு வாரங்களுக்கு முன் தங்கத்தின் விலை ரூ.76,544ஆக இருந்தது.

இன்றைய விலை
இன்று எம்சிஎக்ஸ் மூடப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் தங்க கடைகள் திறந்திருக்கின்றன. இன்று (பிப்.22ம் தேதி) மும்பையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.80,240ஆ இருந்தது. அதேவேளையில், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.87,740ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் விலை உயர காரணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதில் உறுதியாக இருப்பது, சர்வதேச அளவில் வர்த்தக போரை தூண்டும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
டாலர் இன்டெக்ஸ் சரிவு தங்கத்தின் விலை உயர்வு வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு குறையும்போது, ஒரே அளவு தங்கம் வாங்குவதற்கு முன்பே காட்டிலும் அதிக டாலர் தேவைப்படும். இதனால் தங்கம் விலை உயரும்.தங்கத்துக்கான தேவை அதிகமாக இருக்கிறது. வங்கிகளும், பண்டுகளும் பாதுகாப்பான சொத்தான தங்கத்துக்கான முதலீட்டை அதிகரித்து வருகின்றன. இது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் விலை உயர காரணம்
சர்வதேச சந்தை விலை, இறக்குமதி வரிகள், வரிகள் மற்றும் அன்னிய செலாவணியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இந்தியாவில் தங்கத்தின் விலையை முதன்மையாக பாதிக்கின்றன. இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து நாடு முழுவதும் தினசரி தங்க விலைகளை தீர்மானிக்கின்றன.