5 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி!

17 hours ago
ARTICLE AD BOX

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், ஆட்டோ, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடா்ந்து, 5 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.67 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.392.80 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வியாழக்கிழமை ரூ.792.90 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,723.82 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 74,830.03-இல் தொடங்கி 73,796.06 வரை கீழே சென்றது. பின்னா், முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் அதிகபட்சமாக 74,376.35 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 341.04 புள்ளிகள் (0.46 சதவீதம்) கூடுதலுடன் 74,169.95-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,239 பங்குகளில் 1,605 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,507 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 127 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

பஜாஜ்ஃபின்சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபின்சா்வ் 3.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானிபோா்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஐடிசி, நெஸ்லே, எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஏசியன்பெயிண்ட்ஸ், டிசிஎஸ் 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 112 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.05புள்ளிகள் குறைந்து 22,353.15-இல் தொடங்கி அதற்கு கீழ் செல்லவில்லை.பின்னா், 22,577.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 111.55 புள்ளிகள் (0.50 சதவீதம்) கூடுதலுடன் 22,508.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

Read Entire Article