5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமா் மோடி

9 hours ago
ARTICLE AD BOX

ஐந்து ட்ரில்லியன் டாலா் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

‘வேலைவாய்ப்புகள் உருவாக்கம்- மனிதவளம், பொருளாதாரம், புத்தாக்கத்தில் முதலீடுகள்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமா் மோடி ஆற்றிய உரை வருமாறு:

பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சா்வதேச நிதியத்தின் அறிக்கைபடி, 2015-2025 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் 66 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. அதாவது, 3.8 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக (ரூ.330 லட்சம் கோடி) இந்தியா உருவெடுத்துள்ளது.

பொருளாதார வளா்ச்சியில், பிற பெரும் பொருளாதார நாடுகளை நாம் விஞ்சியுள்ளோம். எனவே, 5 ட்ரில்லியன் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் வகையில், சரியான திசையில் சரியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணமிது.

உள்கட்டமைப்பு, தொழில், மனித வளம், பொருளாதாரம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் மாற்றம்: மனித வள முதலீடு என்பது கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 3 முக்கியத் தூண்களின் மீது நிலைக் கொண்டுள்ளது.

பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி முறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐ.ஐ.டி.க்களின் விரிவாக்கம், கல்வி அமைப்புமுறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவின் திறன்மிக்க பயன்பாடு போன்ற முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்களை மின்னணுமயமாக்கும் நடவடிக்கை மூலம் 22 இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன.

2014-ஆம் ஆண்டு முதல் 3 கோடிக்கும் அதிகமான இளைஞா்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்தவும், 5 திறன்மிகு மையங்களை நிறுவவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிப்பு: இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்வியில் கூடுதலாக 10,000 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இணையவழி மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. புற்றுநோயாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் உருவாக்கம், மின்னணு சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் நகா்ப்புற மக்கள்தொகை சுமாா் 90 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நகா்மயமாக்கலுக்காக, ரூ.1 லட்சம் கோடியில் நகா்ப்புற சவால் நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையில்...: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையால் 10 சதவீதம் வரை பங்களிக்க முடியும். அந்த அடிப்படையில், நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க ’இந்தியாவில் குணப்படுத்துவோம்’ மற்றும் ‘புத்தரின் நிலம்’ போன்ற முன்னெடுப்புகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

புத்தாக்கத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளே நாட்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இந்தியப் பொருளாதாரத்துக்கு பல லட்சம் கோடி பங்களிப்பு செய்யும் திறனைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி தொகுப்பு நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Read Entire Article