'4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை

1 day ago
ARTICLE AD BOX

'4-5 சாக்கு மூட்டைகளில் பணம்': டெல்லி ஐகோர்ட் நீதிபதி சர்ச்சை பற்றி உச்ச நீதிமன்றம் அறிக்கை

யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி

பட மூலாதாரம், allahabadhighcourt.in

படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் அதிகளவிலான பணம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
  • எழுதியவர், உமாங் போடார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு நிமிடத்துக்கு முன்னர்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நேற்று, மார்ச் 22 அன்று அதுதொடர்பான அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

யஷ்வந்த் வர்மா குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் அதற்கு வர்மா அளித்துள்ள பதிலறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அந்த அறிக்கைகளில் உள்ளன. எனினும், அந்த அறிக்கையின் சில பகுதிகள் கருப்பு நிறத்தில் மறைக்கப்பட்டுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புது டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து பெருமளவு பணம் கண்டெடுக்கப்பட்டதாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் அவருடைய வீட்டின் சேமிப்பு அறையில் கடந்த 14-ஆம் தேதி தீ பரவியது.

இதுதொடர்பாக, முதல் கட்ட விசாரணை நடத்துமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய்-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து 'ஆழ்ந்த விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார் டிகே உபத்யாய்.

அதேசமயம், தானோ அல்லது தன்னுடைய குடும்பத்தினரோ சேமிப்பு அறையில் ஒருபோதும் பணத்தை வைத்ததில்லை என்றும் தனக்கு எதிரான சதி இது என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை கூறுவது என்ன?

யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி

பட மூலாதாரம், Supreme Court

படக்குறிப்பு, எரிந்த பணம் தொடர்பான படங்களும் உச்ச நீதிமன்ற அறிக்க்கையில் உள்ளன

மார்ச் 15 அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ பரவியதாக, டெல்லி காவல் ஆணையரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் அதில் என்ன சொன்னார் என்பது அறிக்கையில் கருப்பு நிறத்தால் மறைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15 அன்று, இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் நீதிபதி டிகே உபத்யாய்.

மார்ச் 15 அன்று காலையில் நீதிபதி வர்மா வீட்டின் சேமிப்பு அறையில் இருந்து எரிந்த சிலையில் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்ததாகவும் நீதிபதி டிகே உபத்யாய் கூறியுள்ளார்.

அதன்பிறகு, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டுக்கு தன்னுடைய செயலாளரை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல் ஆணையரால் அனுப்பப்பட்ட சில அறிக்கைகளையும் டிகே உபத்யாய் தன் அறிக்கையுடன் இணைத்துள்ளார். அதில், சேமிப்பு அறையில் இருந்த பாதி எரிந்த நிலையில் இருந்த 4-5 சாக்கு மூட்டைகளில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த வீட்டில் வசிப்பவர்கள், வேலையாட்கள் மற்றும் தோட்டக்காரர்கள் மட்டும் தான் சேமிப்பு அறைக்கு செல்ல முடியும் என டிகே உபத்யாய் கூறியுள்ளார். எனவே, இதுதொடர்பாக மேலதிக விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிகே உபத்யாயிடம் சில படங்கள் மற்றும் வீடியோக்களையும் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார். அவற்றில், அந்த அறையில் ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருந்ததை காண முடிகிறது.

அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு அனுப்பியதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் டிகே உபத்யாய்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியது என்ன?

யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி

பட மூலாதாரம், Supreme Court

படக்குறிப்பு, அந்த அறையில் எரிந்த நிலையில் பணத்தை தீயணைப்பு துறையினர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் யஷ்வந்த் வர்மாவிடம் கீழ்க்கண்ட 3 கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

  • அந்த பணம் எப்படி சேமிப்பு அறைக்கு வந்தது?
  • அந்த பணத்தின் ஆதாரம் என்ன?
  • மார்ச் 15 அன்று காலை அந்த பணம் எப்படி அகற்றப்பட்டது?

இதற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்துள்ள பதிலில், வீட்டில் தீப்பற்றிய போது தான் மத்திய பிரதேசத்தில் இருந்ததாகவும் மார்ச் 15 மாலை தான் டெல்லி திரும்பியதாகவும் கூறியுள்ளார். வீட்டில் தீ பரவிய போது தனது மகளும் பணியாட்களும் வீட்டில் இருந்ததாகவும் ஆனால் தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்கள் சேமிப்பு அறையில் பணம் எதையும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரியவந்ததாக யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்றும், இவ்விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தன்னுடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய பதிலில், "திறந்த நிலையில் இருக்கக் கூடிய, எல்லோரும் சென்று வரக்கூடிய ஓர் அறையில் யாராவது பணம் வைப்பார்கள் என்பது நம்ப முடியாததாக உள்ளது." என தெரிவித்துள்ளார். தான் வங்கியில் இருந்து மட்டும் தான் பணத்தை எடுப்பதாகவும் தன்னுடைய பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியிலிருந்து அந்த அறை முற்றிலும் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கும் அந்த அறைக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகவும் யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதில் தொடர்புபடுத்தப்படும் பணத்தை தன்னிடம் காட்டவோ அல்லது கொடுக்கவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பணியாட்களிடமும் இதுதொடர்பாக விசாரித்ததாகவும், எந்த பணமும் அந்த அறையிலிருந்து அகற்றப்படவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் வர்மா கூறியுள்ளார்.

இந்த முழு வழக்கும் தனக்கு எதிரான சதி என அவர் தெரிவித்துள்ளார். "பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து உருவாக்கிய என்னுடைய புகழை இந்த சம்பவம் சிதைத்துள்ளது." என அவர் தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் டிகே உபத்யாய் விரும்பினால் தான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதையும் விசாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தது என்ன?

யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி

பட மூலாதாரம், supreme court

படக்குறிப்பு, இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட குழுவிடம் வழங்கப்படுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த ஆறு மாத கால போன் பதிவுகளை தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்த்வாலியா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1999-ல் உச்ச நீதிமன்றத்தில் உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

விசாரணையின் அடிப்படையில், நீதிபதி குற்றமற்றவர் என்றோ அல்லது அந்த நீதிபதியை பதவி விலகுமாறோ கூறும். அவர் பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அக்குழு தகவல் அளிக்கும்.

சில சந்தர்ப்பங்களில், நீதிபதிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இப்போதைக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எவ்வித நீதித்துறை சார் பணிகளும் வழங்கப்படக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவெடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Read Entire Article