ARTICLE AD BOX

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போராக இப்படத்தின் கதை உருவாகியிருந்தது. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'சாவா' படம் முதல் நாளில் உலக அளவில் ரூ..50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது மாறியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி 33 நாள்களிலேயே உலகளவில் ரூ. 761 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 560 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாகத் தெரிகிறது. முக்கியமாக, மகாராஷ்டிரத்தில் பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்படுவதால் இப்படம் மேலும் வசூலைக் குவித்து இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக மாறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 98வது அகில இந்திய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பிரதமர் மோடி பங்கேற்று 'சாவா' படத்தை பாராட்டியுள்ளார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா் மாநிலத்தை தொடர்ந்து கோவாவிலும் 'சாவா' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.