ARTICLE AD BOX
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அந்த கவனம் சிதறாமல் அவ்வப்போது தனது கருத்துக்களையும் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தும் வருகிறார். இதன் காரணமாக ஆதரவும் எதிர்ப்பும் அவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
சீமான் அண்மைகாலமாக பெரியார் மீது தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி வருவது, சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் இருந்த புகைப்படம் போலி என்ற செய்திகள் என தற்போதைய அரசியல் களத்தில் சீமான் பெயர் அதிகமாக உச்சரித்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் சிலரே அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் பகுதி மாவட்ட செயலாளர்கள், தஞ்சை முன்னாள் மாவட்ட செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் என 51 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் என சுமார் 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.