ARTICLE AD BOX
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 25-ம்தேதி சென்னையில் நடந்த 2-வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது ஓவர் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தொடரை வசப்படுத்துவதில் தீவிரம் காட்டும் முனைப்புடன் விளையாட தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சூறாவளி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அதே சமயம், தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை திணரடித்தார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலத்தை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஜாமி சுமித், ஜாமி ஓவர்டான் ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 127 ரன்களை எடுத்து தள்ளாடிய நிலையில் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் அணியை தூக்கி நிறுத்தியதுடன் அவரது அதிரடியால் இங்கிலாந்து 150-ஐ கடந்ததுடன், சவாலான ஸ்கோரையும் எட்டிப்பிடித்தது. கடைசியான 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வரிசையாக நடையை கட்டினர். இதனால் நெருக்கடியான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 40 ரன்களை எடுத்தாலும், இந்த போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது என்பது ஆறுதலான விஷயமாகும்.
இதனால் 20 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெற்று வாகை சூடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 31-ந்தேதி புனேயில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.