ARTICLE AD BOX
டுனேடின்: மழையால் தடைபட்ட போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று டுனேடின் நகரில் நடந்தது. மழை காரணமாக போட்டி தலா 15 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. நியூசி. பந்து வீச, முதலில் களம் கண்ட பாக். 15 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. அணியின் கேப்டன் சல்மான் ஆகா 46 (28பந்து, 4பவுண்டரி, 3 சிக்சர்), ஷதாப் கான் 26 (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாகீன் அப்ரிடி 22 (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் விளாசி ஸ்கோர் உயர விளையாடினர். நியூசி வீரர்களில் ஜேகப் டஃபி, பென் சீர்ஸ், ஜேம்ஸ் நீஷம், ஈஷ் சோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அதனையடுத்து 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்ஃபேர்ட் 45 (22 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), ஃபின் ஆலன் 38 (16பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) ரன் விளாசி முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தனர். அதனால் நியூசி 13.1 ஓவரிலேயே இலக்கை கடந்தது. அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சேல் ஹே 21, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். பாக் தரப்பில் ஹாரிஸ் ரஃவூப் 2 விக்கெட் வீழ்த்தினார். நியூசியின் டிம் செய்ஃபோர்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த போட்டியில் பாக். வீரர்கள் 8 சிக்சர்களையும், நியூசி வீரர்கள் 11 சிக்சர்களையும் விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நியூசி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மார்ச் 21ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறும்.
The post 2வது டி20யில் விறுவிறுப்பு: விட்டது விண் மழை அடுத்தது சிக்சர் மழை: பாக்.கை வீழ்த்திய நியூசி appeared first on Dinakaran.