21 ஆண்டுகள் கழித்து ஆட்டோகிராஃப் மறுவெளியீடு!

5 days ago
ARTICLE AD BOX

தேசிய விருது வென்ற இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படம் 21 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். இவர் சொந்தமாகத் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம், சிறந்த பிண்ணனிப் பாடகர் (சித்ரா - ஒவ்வொருப் பூக்களுமே), சிறந்த பாடலாசிரியர் (பா. விஜய் - ஒவ்வொருப் பூக்களுமே) உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

இதையும் படிக்க | சப்தம் படத்தின் டிரைலர் வெளியானது!

ஆட்டோகிராஃப் படத்தில் விளம்பரப் பட நிறுவனத்தை நடத்தும் சேரன் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஊருக்குச் செல்வார். அப்போது தனது கடந்த கால நண்பர்கள் மற்றும் தான் காதலித்த மூன்று பெண்களைச் சந்தித்து தனது வாழ்வின் பழைய நினைவுகளைச் சொல்வதாக இந்தப் படத்தின் கதை நகரும்.

படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பரத்வாஜ் இசையில் உருவான பாடல்களும் முக்கியக் காரணமாக இருந்தன. அனைத்துப் பாடல்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

இந்த நிலையில், 21 ஆண்டுகள் கழித்து ஆட்டோகிராஃப் திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சேரன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆட்டோகிராஃப் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படாமல் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புதிய டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை திரையரங்கில் ரசிக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Read Entire Article