ARTICLE AD BOX
மனிதர்களுக்கு ஏற்படும் தேவையற்ற உடல் பருமனும் பெரிய அளவில் கவலையை ஏற்படுத்துகிறது. உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் உடல் பருமன் ஏற்படுவது எனக் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு உடல் சார்ந்து உண்டாகும் பல பிரச்னைகளுக்கு அடிப்படையாக விளங்குவது இந்த உடல் பருமன்தான். இந்த நிலையில், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லான்செட் நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில்ஆய்வில், 'இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்கள் மக்கள்தொகை 450 மில்லியன் (45 கோடி) ஆக இருக்கலாம். இதில் 22 கோடி அளவிலான ஆண்கள் மற்றும் 23 கோடி அளவிலான பெண்கள் அடங்குவர்.
ஆனால், இந்த வரிசையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் 627 மில்லியன் (62 கோடி) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, 214 மில்லியனை (21 கோடி) எட்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் நைஜீரியா முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களை பிடிக்கும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆய்வின்படி (2021), ஏற்கனவே உலகில் நடுத்தர வயதில் ஒரு பில்லியன் அளவிலான ஆண்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெண்கள் அதிக எடை மற்றும் பருமன் உடையவராக இருக்கிறார்கள். இந்தியாவில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 180 மில்லியனுக்கும் (18 கோடி) அதிகமாக இருந்தது. இதில் 81 மில்லியன் எண்ணிக்கையிலான ஆண்கள் மற்றும் 98 மில்லியன் எண்ணிக்கையிலான பெண்கள் அடங்குவர். 2050ஆம் ஆண்டில், உலகளவில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.8 பில்லியனாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
1.8 பில்லியன் அளவிலான ஆண்கள் மற்றும் 1.9 பில்லியன் அளவிலான பெண்கள் அதிக எடை கொண்டவராக திகழ்வார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், இந்தியாவில் 2050 ஆம் ஆண்டு வாக்கில் 5 முதல்14 வயதுக்குட்பட்ட சுமார் 30 மில்லியன் சிறுவர், சிறுமிகள் அதிக உடல் பருமனை கொண்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 40 மில்லியன் நடுத்தர வயதினர் அதிக உடல் பருமனை/எடையினை கொண்டிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.