ARTICLE AD BOX
தேனி அருகே மதுராபுரியில் வருகிற 2 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பந்தக்கால் நடப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தனர்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: தேனி எங்களுக்கு ராசியான இடம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற இடம் மீண்டும் சரித்திரம் திரும்புகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக வெற்றியின் வெளிச்சம் தேனியில் தொடங்குவதால் இங்கு கூட்டம் நடத்தப்படுகிறது. காக்கா உட்கார பனைமரம் விழுந்தது போல் ஓபிஎஸ்-க்கும் நாங்கள் கூட்டம் நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெரிவிப்பார். வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது. ஓபிஎஸ் இணைப்பு குறித்து நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை எல்லாவற்றிற்கும் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்துவிட்டார். மூன்று மொழிகளை படிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை படிப்பவர்களை ஆதரிக்கிறோம். ஆனால் திணிப்பதை விரும்பவில்லை.
இன்னும் கூட்டமே நடைபெறவில்லை இதைவிட பெரிதாக கூட்டம் கூட்ட ரவீந்திரநாத் கூறுகிறார் என்றால் அவர்களுக்கு இப்போது பயம் வந்துவிட்டது. கூட்டம் கூட்டட்டும் அல்லது தஞ்சாவூர் கடலில் கூட மூழ்கட்டும். அம்மா என்று கூறுவது ஜெயலலிதாவிற்கு 100% பொருத்தமானது அப்பா என்பது ஸ்டாலினின் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு பொருத்தமானது அதை ஏன் இவர் விரும்புகிறார் என தெரியவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.