ARTICLE AD BOX
பெரம்பூர்: தெற்கு ரயில்வே 2024ம் ஆண்டில் ரூ.9,170 கோடிக்கு மொத்த வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் நேற்று 76வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது: 2024-25ல் தெற்கு ரயில்வே வருவாய், பாதுகாப்பு, நேரக்கட்டுப்பாடு போன்ற பல பணிகளில் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2024-25ம் ஆண்டில் எங்கள் வருவாய் தொடர்ந்து வளர்ந்து 9170 கோடி மொத்த வருவாயை ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5% அதிகம்.பயணிகள் போக்குவரத்து அதிகரித்த போதிலும் 545 மில்லியன் பயணிகளை கையாண்ட போதிலும் 91.1% நேரமின்மையை கடைப்பிடித்து உள்ளோம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விடுமுறை நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் 2329 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம். இது முந்தைய ஆண்டை விட 2.8 மடங்கு அதிகம்.
ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்யும் விதமாக 13 ரயில் நிலையங்கள் வேகமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 95 ரயில் நிலையங்களில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 604 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டன.
மேலும் 602 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2.05 கோடி மதிப்புள்ள பயணிகளின் உடைமைகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 1752 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 29 பயணிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தெற்கு ரயில்வே தனது சிறப்பான பங்களிப்பை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post 2024ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் வருவாய் ரூ.9170 கோடி: பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல் appeared first on Dinakaran.