ARTICLE AD BOX
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக காய் நகர்த்துகிறது. மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய நியமனங்கள் என வியூகங்களை வகுத்து வருகிறது.

தமிழகத்தில் அதிமுக- திமுக என பல ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக அடுத்த 10 வருடங்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க சிரமப்பட்டது. அதன் படி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியே திமுகவிற்கு கிட்டியது. இந்த நிலையில் தான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வலுவான கூட்டணியை திமுக உருவாக்கியது. அதன் படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என முக்கிய அரசியல் கட்சிகளை இணைத்தது.

இதனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர மீதமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றி அடுத்தடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது. இதனால் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உருவெடுத்தது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணியை ஆளுங்கட்சியான திமுக தற்போதே தொடங்கியுள்ளது.

அதன் படி 200 தொகுதி இலக்காக என நிர்ணயித்து களம் இறங்கியுள்ளது. இதனால் வட்ட செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி திமுக சார்பில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதன் படி இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என புதிதாக உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த தோப்பு வெங்கடாசலம், லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

செஞ்சி மஸ்தான், அப்துல் வஹாப் ஆகியோருக்கும் மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு பழனிவேல் நியமிக்கப்பட்டார். திருப்பூர் மேயர் தினேஷ் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக ரமேஷ் ராஜ் நியமிக்கப்பட்டார்.
நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக க பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.