ARTICLE AD BOX
“2 மடங்கு புத்திசாலின்னு நெனப்பு”.. சோஹோ ஸ்ரீதர் வேம்புவை அட்டாக் செய்த திமுக வக்கீல்!
சென்னை: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்ததை அடுத்து தமிழகத்தில் மீண்டும் விவாதம் வெடித்துள்ளது. அவரது கருத்துக்கு திமுகவின் சரவணன் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, வடநாட்டு வணிக மையங்களுடன் சிறப்பாக ஈடுபடுவதற்கு தமிழ் பொறியாளர்கள் இந்தி கற்க வேண்டும், அரசியலைப் புறக்கணித்து விட்டு, மொழியைக் கற்றுக்கொள்வோம் என்று பேசியதை அடுத்து, இதுதொடர்பான விவாதம் மீண்டும் வெடித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொழி குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு, "இந்தியாவில் சோஹோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள், மும்பை, டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு பெரிய குறைபாடு.
இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் இந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலைப் புறக்கணித்து விட்டு, மொழியைக் கற்றுக்கொள்வோம். இந்தி கற்றுக் கொள்வோம்" என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் கருத்துகள் இணையத்தில் விமரசனங்ளுக்கு உள்ளாகி வருகின்றன. ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் பிஸினஸூக்கு இந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள்.
உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்? அதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சனையைத் தீர்க்கும்.
இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.