2 நாளில் 42 மீனவர்களுடன் 8 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை... மீனவர்கள் அதிர்ச்சி!

2 days ago
ARTICLE AD BOX

பாக் நீரிணை பகுதியில் உள்ள பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களையும் அவர்களது 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் கூட வராத நிலையில் மேலும் 32 மீனவர்களை சிறைபிடித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது இலங்கை கடற்படை. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 478 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

ராமேஸ்வரம் படகு தளம்

இதனை தொடர்ந்து மீனவர் சங்க தலைவர் சேசுராஜா, கோபால், வியாகுலம், ஆரோக்கிய மன்றோ, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகளையும், அப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற சில்வஸ்டர், ராஜேந்திரன், ஸ்டாலின், சதீஷ்குமார், மணிகண்டன், கொலம்பஸ், ரமேஷ், ரீகன், பாண்டி உள்ளிட்ட 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்தொழில் அமைச்சக அதிகாரிகள் மூலம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதனிடையே ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 67 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட 62 விசைப்படகுகள், 5 நாட்டுப்படகுகளையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் நாட்டுமையாக்கின. இதையடுத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 படகுகள், மண்டபம் 3, புதுக்கோட்டை 14, நாகை 16 மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 2 படகுகள் என 67 படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை மீன் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழக படகுகள் (பைல் படம்)

மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்க்கையை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ள செயல் மீனவர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இலங்கை அரசின் இந்த செயலை தடுத்து நிறுத்தி தங்கள் படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article