ARTICLE AD BOX
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பரலியா கிராமத்தில் கலுலால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் வராததால் கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர்.
இதனிடையே, கலுலாலின் மகன் பிரகலாத் (வயது 5) நேற்று ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக்கொண்டிருதார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பிரகலாத் விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் 32 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிய நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், 16 மணிநேரம் தீவிர மீட்புப்பணிக்கு பின் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை உடனடியாக மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 16 மணிநேரம் நீட்ட மீட்புப்பணியின் முடிவில் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.