ARTICLE AD BOX
நமது நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் பல வகையில் சவால்களையும் அனுபவங்களையும் சந்திக்க நேர்கிறது. அதில் முக்கியமானது குழந்தை வளர்ப்பு. குழந்தைகள் அவர்களின் டீனேஜ் பருவத்திலும் மற்றும் முழுமையாக வளர்ந்த பின்னும் பொறுப்புணர்வோடு வாழ்க்கையை நடத்திச்செல்ல அவர்களுக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தை 13 வயதிற்குள் பெற்றோர்கள் சொல்லித்தருவது அவசியம். அவற்றுள் முக்கியமான 8 விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1.குழந்தைகளுக்கு நேர்மை, உண்மை மற்றும் ஒருமைப்பாட்டை விளக்கிச் சொல்லித்தருவது அவசியம். இது அவர்களுக்கு எது சரி எது தவறு என்பதைக் கண்டறியவும், முடிவுகளைத் தானே தீர்மானிக்கவும், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளவும் உதவும். பேச்சில் வெளிப்படைத் தன்மையோடிருப்பது அவர்களுக்கு பயமில்லாமலிருக்க உதவும் என்பதை புரியவைக்க வேண்டும்.
2. பணத்தின் அருமையைப் புரியவைத்து அதை சேமிக்கவும் பட்ஜெட் போட்டு செலவழிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும். சின்ன சின்ன வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று குழந்தைகளை உணரச்செய்வது எதிர்காலத்தில் ஆரோக்கியமான நிதி நிர்வாகத்திற்கு அவர்களுக்கு உதவும்.
3. சமையலில் அடிப்படை அறிவு பெறவும், தன் துணிகளை தானே சுத்தம் செய்யவும் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு சுதந்திர உணர்வையும், பொறுப்புணர்வையும் தர உதவும்.
4. டீனேஜ் பருவத்திற்குள் குழந்தைகள் நுழையும்போது நண்பர்களுடன் ஒத்துப்போவதில் அவர்களுக்கு சிரமம் உண்டாகலாம். எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நிகழ்வுகளுக்கு துணிந்து 'நோ' சொல்ல சொல்லித்தர வேண்டும். இது அவர்களை உண்மைக்குப் புறம்பாக செயல்படுவதைத் தடுத்து அவர்களின் மதிப்பை உயரச் செய்யும்.
5.இலக்கை அடையவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் கடின உழைப்பு, பொறுமை மற்றும் விடாமுயற்சி அவசியம் தேவை என்பதை சொல்லித்தர வேண்டும். சவால்களை சந்திக்கவும், தோல்வியை துச்சமாக மதிக்கவும், கடினமான வேலைகளை துணிவுடன் மேற்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு இன்டர்நெட்டின் அவசியத்தை புரிய வைத்து அதிலுள்ள நன்மை தீமைகளை தெளிவாக கற்றுக்கொடுப்பது அவசியம். இன்டர்நெட்டை உபயோகிக்கும் நேரத்தையும் அவுட்டோர் விளையாட்டுகளில் பங்கேற்கும் நேரத்தையும் சமநிலைப்படுத்தி பயன் பெறும் உத்திகளையும் கற்றுக் கொடுப்பது அவசியம்.
7.குழந்தைகளுக்கு பிறரிடம் அன்பையும் பரிவையும் காட்டுவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் அவர்களின், உணர்ச்சிகளை உணர்ந்து கையாளும் திறன் அதிகரிக்கும். எந்தவித வேறுபாடும் இன்றி பிறரை மதிக்கவும், தேவைப்படுவோர்க்கு உதவி செய்யவும் இது அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்.
8. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளவும், உடற்பயிற்சி செய்யவும், உடலையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும் கற்பிப்பது மிக அவசியம். அதேபோல் மன அழுத்தமின்றி மென்டல் ஹெல்த்தை பராமரிக்கவும் கற்றுக் கொடுத்து, தேவைப்படும்போது பெற்றோரின் உதவியை தயக்கமின்றி நாடலாம் என்றும் சொல்லித்தர வேண்டும்.
மேலே கூறிய விதத்தில் குழந்தைகளை தயார்படுத்தி விட்டால் அவர்கள் வாழ்க்கைப் பயணம் டீனேஜிலும் அதற்குபின்னும் சிறப்பாகவே செல்லும் என்பதில் சந்தேகமில்லை.