ARTICLE AD BOX
129 கிலோ எடை இருந்த பெண்.. ஒரே ஆண்டில் 50 கிலோ எடையை குறைத்தது எப்படி! அட சீக்ரெட் இதுதானாம்!
மும்பை: இந்த காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் என்பது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பலரும் உடல் எடையைக் குறைக்கப் போராடி வருகிறார்கள். ஆனால், இங்கே ஒரு பெண் வெறும் ஓராண்டில் 129 கிலோவில் இருந்து சுமார் 50 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இதை எப்படி அவர் குறைத்தார்.. இதற்குப் பின்னால் உள்ள சீக்ரெட் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நவீன உலகில் உடல் உழைப்பு என்பது பெரியளவில் குறைந்துவிட்டது. ஆபீஸ் போனாலும் நாம் 8- 9 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறோம். வீட்டிற்கு வந்தாலும் இப்போது பெரியளவில் உடல் உழைப்புகள் தேவைப்படுவது இல்லை. இதனால் பலருக்கும் உடல் பருமன் ஏற்பட்டு பெரியளவில் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உடல் பருமன்
அப்படி தான் இங்கே பெண் ஒருவர் கடந்தாண்டு 129 கிலோ இருந்துள்ளார். ஓவர் வெயிட் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், எடையிழப்பு பயணத்தைத் தொடங்கினார். வைராக்கியத்துடன் தீவிரமாக முயன்ற அந்தப் பெண் ஒரே ஆண்டில் சுமார் 50 கிலோ எடை குறைத்துள்ளார். அதெப்படி சாத்தியம் நானும் பல முறை எடை குறைக்க முயன்று இருக்கிறேன்.. என்னால் முடியவில்லையே என நீங்கள் கேட்கலாம். இந்த பெண்ணும் கூட கடந்த காலங்களில் பல முறை உடல் எடையைக் குறைக்க முயன்று இருக்கிறார்.
இருப்பினும், அப்போதெல்லாம் இவரால் எடை இழப்பை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. ஆனால், இந்த முறை அதில் வெற்றி பெற்றுள்ளார். சுஷ்மிதா கௌதம் என்ற இந்த பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எப்படி உடல் எடையைக் குறைத்தார் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த காலங்களில் மன அழுத்தம் காரணமாக அவர் ஓவர் ஈடிங் செய்துள்ளார். இதன் காரணமாகவே அவரால் வெற்றிகரமாக உடல் எடையைக் குறைக்க முடியாமல் போனது.
50 கிலோ குறைத்துள்ளார்
கடந்தாண்டு தொடக்கத்தில் அவரது உடல் எடை 129 கிலோவை தொட்டது. அப்போது தான் இதில் உள்ள ஆபத்தை அவர் உணர்ந்து இருக்கிறார். அதன் பிறகு உடல் எடை குறைப்பு பயணத்தைத் தொடங்கிய அவர், தீவிர முயற்சியால் 12 மாதங்களில் மளமளவென 50 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.. அதாவது கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ என்ற ரேஞ்சில் எடையைக் குறைத்துள்ளார்.
வருங்கால கணவரின் ஆதரவு
அவருக்குக் கடந்தாண்டு தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்த போது தான் எடை அதிகமாக இருந்ததாக சுஷ்மிதா கூறுகிறார்.. குண்டாக இருப்பதால் பலரும் இந்த பெண் வேண்டாம் எனக் கூட தனது வருங்கால கணவரிடம் கூறியதாக சுஷ்மிதா கூறுகிறார். இருப்பினும், அந்த இளைஞர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சுஷ்மிதாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே தனது வருங்கால கணவருக்காக எப்படியாவது உடல் எடையைக் குறைத்த தீர வேண்டும் என சுஷ்மிதா தீவிரம் காட்டியுள்ளார். அதிலும் திருமணத்திற்கு முன்பே எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதை இப்போது அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.
உணவு டயர்ட்
அவர் மற்றொரு வீடியோவில் அன்றாட வாழ்க்கை முறையில் செய்த மாற்றமும் உணவு முறையை மாற்றிக் கொண்டதுமே எடை இழப்புக்கு முக்கிய காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது தினசரி உணவில் நிறையப் பன்னீர் சேர்த்துக் கொண்டாராம். மேலும், வெளியே ஹோட்டலில் உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டு, வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். இதுவும் எடை இழப்பு பயணத்தை வேகப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
பாலக் சூப், காலிஃபிளவர் மற்றும் பனீர் சப்ஜி, தஹி தட்கா, பன்னீர் மற்றும் கேப்சிகம் ஸ்டிர் ஃப்ரை, பன்னீர் டிக்கா மசாலா, கத்தரிக்காய், காய்கறிகளுடன் துருவிய பன்னீர் ரொட்டி, மலாய் பியாஸ் பன்னீர் ஆகிய உணவுகளைத் தனது டயர்ட்டில் சேர்த்துள்ளார். மேலும், தினசரி உடற்பயிற்சியும் செய்துள்ளார்.
ஏகப்பட்ட நன்மைகள்
எடையைக் குறைத்தவுடன் உடலிலும் கூட ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார் சுஷ்மிதா. குறிப்பாக பிசிஓடி, தைராய்டு, கழுத்து/ முதுகெலும்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை மேம்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைத்த பிறகு ஃபிட்டாகவும் எனர்ஜியாகவும் இருக்க முடிவதாகக் குறிப்பிடும் சுஷ்மிதா, தன்னால் செய்ய முடிகிறது என்றால் மற்றவர்களும் இதைச் செய்து காட்டலாம் எனக் கூறியிருக்கிறார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.