ARTICLE AD BOX
புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் காவல் நிலையம் அருகே பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த செவ்வாக்கிழமை அதிகாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண் அருகே வந்த இளைஞர் ஒருவர் எங்கே செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் பல்தான் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தை காட்டுவதாக அழைத்து சென்றுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் லைட் ஆஃப் செய்யப்பட்ட பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தத்தாத்ரேய ராம்தாஸ் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்ததுள்ளது. குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் உள்ள நிலையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.