“1,010 பேருக்கு வேலை வாய்ப்பு” - கோத்ரெஜ் ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தகவல்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 10 Mar 2025 04:51 PM
Last Updated : 10 Mar 2025 04:51 PM

“1,010 பேருக்கு வேலை வாய்ப்பு” - கோத்ரெஜ் ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தகவல்

செங்கல்பட்டு அருகே கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
<?php // } ?>

செங்கல்பட்டு: “தமிழகத்தின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்துக்கே தெரியும். அதனால்தான் தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்வில் முதல்வர் பேசியதாவது: “தமிழக அரசுக்கும், கோத்ரேஜ் நிறுவனத்துக்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு. 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. கோத்ரெஜ் நிறுவனத்தின் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரு திட்டம் செயலாக்கம் பெறுவது வரைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, எப்படி கவனமாகவும், பொறுப்போடும் செயல்படுகிறது என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய கோத்ரெஜ் குழுமத்துக்கு பல்லாண்டு பாரம்பரியமும் பல லட்சம் நுகர்வோரின் ஆதரவும் இருக்கிறது. தமிழகத்தில் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய வகையில், அதிநவீன உற்பத்தித் திட்டத்தை நீங்கள் நிறுவியுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழகமும் ஒன்று என்பதால், தமிழகம் பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. பிரிட்டானியா, டாபர், ITC நிறுவனங்கள் மற்றும் கோத்ரெஜ் நிறுவனமும் சேர்த்து, பல FMCG நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழகத்தில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில், தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம், தமிழகம்தான். இறக்குமதி சார்புகளை வெகுவாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நாங்கள் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள், தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் லட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலீட்டாளர்களுக்குத் தேவையான, அனைத்து ஆதரவுச் சேவைகளையும் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால், வெற்றி நிச்சயம்.அதைத்தான் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழகத்துக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடிகிறது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது.

பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்துக்கே தெரியும். அதனால்தான் தமிழகத்தில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இந்த உற்பத்தித் திட்டத்தின் சிறப்பம்சமாக, 50 விழுக்காடு அளவுக்கு பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு சொல்லி வருகிறேன்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தில், வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. சென்னையின் நுழைவு வாயில் என்று இந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சொல்வது போன்று, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக, முதலீடுகளுக்கான முதல் முகவரியாக நம்முடைய தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதிவிரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள். இந்தத் திட்டத்தின் திறப்பு விழா இன்றைக்கு சிறப்போடு நடைபெறுவது, உண்மையில், தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article