ARTICLE AD BOX
துபாய்: 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வில்லனாக ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட கேஎல் ராகுல், 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரே கேஎல் ராகுலுக்கானது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தி இருக்கிறது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 76 ரன்களும், கடைசி வரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 33 பந்துகளில் 34 ரன்களும் விளாசி அசத்தினர்.

2023ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் 107 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரி அடித்து 66 ரன்களை சேர்த்தார். அன்றைய நாளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை அடித்தது கேஎல் ராகுல் தான். ஆனாலும் ரசிகர்கள் கேஎல் ராகுலை வில்லனாக திட்டி தீர்த்தனர்.
அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் கேஎல் ராகுல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டல் செய்யப்பட்டு வந்தார். அந்த கேலிகளையும், கிண்டல்களையும் புகழ் மாலையாக மாற்றி இருக்கிறார் கேஎல் ராகுல். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாக கேஎல் ராகுல் அமைந்துள்ளார்.
இந்திய அணியின் புதிய ஃபினிஷராகவும் மாறியுள்ள கேஎல் ராகுல், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் கடைசி வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதற்கு கேஎல் ராகுல் முக்கியமான காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒரேயொரு ஐசிசி தொடரில் வில்லனாக இருந்து இந்தியாவின் ஹீரோவாக மாறி இருக்கிறார் கேஎல் ராகுல். கன்சிஸ்டன்சியுடன் ஆடிய அவர் கொஞ்சம் கூட பதற்றமின்றி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேஎல் ராகுல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.