ARTICLE AD BOX
துபாய்: பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமுக்கு முன் இந்திய அணியின் மூத்த வீரர் "விராட் கோலி ஜீரோ" என பேசியிருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொஹ்சின் கான். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அணி சமீப காலமாக மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக சொல்லப்படும் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் அவர் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 321 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடும் போது ஆமை வேகத்தில் விளையாடி 81 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார் பாபர்.

அதுபோல அவர் ரன் குவித்தாலும் அதுவும் மோசமான செயல்பாடாகவே அமைந்து வருகிறது. அவரது ஆட்டத்தின் மீது கடும் விமர்சனம் இருக்கும் நிலையில் அவரை புகழ்ந்து பேசுவதாக நினைத்து விராட் கோலியை மட்டம் தட்ட முயன்று இருக்கிறார் மொஹ்சின் கான்.
பாபர் அசாம் மூன்றாம் வரிசையில் தான் விளையாடுபவர், அவரை துவக்க வீரராக ஆட வைப்பதால் தான் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை எனவும் மொஹ்சின் கான் கூறி இருக்கிறார். இது பற்றி மொஹ்சின் கான் பேசுகையில், "நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன், பாபர் அசாமுடன் விராட் கோலியை ஒப்பிட்டால், விராட் கோலி ஒரு ஜீரோ."
"ஆனால், இது முக்கியமான பிரச்சனை இல்லை. ஆனால் உண்மையான பிரச்சனை என்னவெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலுமாக மோசமாகிவிட்டது. இங்கே எந்த திட்டமும் இல்லை, எந்த வியூகமும் இல்லை. தோல்விக்கு யாரும் பொறுப்பேற்கவும் முன் வருவதில்லை. பாபர் அசாமை ஏன் துவக்க வீரராக ஆட வைக்கிறீர்கள்? அது அவரது இயல்பான பேட்டிங் வரிசை இல்லை."
IND vs NZ: காலை தொட வந்த கோலி.. விலகி ஓடிய அக்சர் படேல்.. நியூசிலாந்து போட்டியில் என்ன நடந்தது?
"பாபர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன், பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக இருப்பவர். அவர் அந்த இடத்தில் தான் சிறப்பாக ஆடுவார். பயிற்சியாளர்கள் அவரை அந்த இடத்திலேயே பேட்டிங் செய்யுமாறு வலியுறுத்தி இருக்க வேண்டும், சதம் அடிக்குமாறு கூறியிருக்க வேண்டும். அவர் அதை செய்திருந்தால், மற்றொரு வீரர் அரைசதம் அடித்திருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக 300 ரன்களை எட்டி இருக்கும்"
"இதுபோன்ற அணுகுமுறையைத்தான் பாகிஸ்தான் எடுத்திருக்க வேண்டும். பாபர் அசாம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தன்னால் பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்ள முடியாது என மறுத்து இருக்க வேண்டும். அவரை எப்படி துவக்க வீரராக விளையாட வைப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள் என எனக்கு தெரியவில்லை. அது மிகவும் மோசமான முடிவு" என்றார் மொஹ்சின் கான்.
பாபர் அசாம் மோசமாக ஆடி வரும் நிலையில் விராட் கோலியை ஜீரோ என மொஹ்சின் கான் கூறியிருப்பது நகைப்புக்குரியதாகவும், அதே சமயம் கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது. விராட் கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் உலகிலேயே மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார், விரைவில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு அபத்தமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் மொஹ்சின் கான்.