ARTICLE AD BOX
ரோட்டுக்கடை வெங்காய சட்னி அவளோ ருசியா இருக்க இதாங்க காரணம்.. தெரிஞ்சு ட்ரை பண்ணிப் பாருங்க..
Rottukadai Vengaya Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இந்த இட்லி தோசைக்கு வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஸ்பெஷலாக, இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோட்டுக்கடை வெங்காய சட்னியை செய்யுங்கள்.
இந்த வெங்காய சட்னியை பலவாறு செய்யலாம். அதில் ஒரு சிம்பிளான, அதே சமயம் மிகவும் சுவையான ஒரு முறையைத் தான் பார்க்கப் போகிறோம். இந்த சட்னியின் ஸ்பெஷலே, இதில் எந்த ஒரு மசாலா பொடியையும் சேர்ப்பதில்லை. காரத்திற்கு வெறும் பச்சை மிளகாயை மட்டுமே சேர்க்க வேண்டும். இந்த சட்னியை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 5 பல்
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து, வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்து,
நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வதக்கி வைத்துள்ளதை ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சட்னி எந்த
பதத்திற்கு வேண்டுமோ அந்த அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஆனால்
இந்த சட்னி ஓரளவு கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான ரோட்டுக்கடை வெங்காய சட்னி தயார்.