ARTICLE AD BOX
ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவிருந்த போட்டி, ஈரமான ஆடுகளத்தால் தாமதமாகியுள்ளது. இரண்டு மணிக்கு டாஸ் போடப்பட வேண்டிய நிலையில், மழையால் ஆடுகளத்தின் வெளிப்புறம் ஈரப்பதமாக இருந்ததால், அம்பயர் டாஸ் நிகழ்வை தள்ளி வைத்தார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றி பெறுவது யார்? என்பதற்கான போட்டியாகவே உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, நிச்சயமாக இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று, தங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவை ஓரளவு சமாளிக்க முயற்சிக்கும். பாகிஸ்தான் இதற்கு முன் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி நடக்க உள்ள நேரத்தில் பலமுறை மழை குறுக்கிடும் என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. எனவே, இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? எனத் தெரியாத நிலையே உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், முன்னாள் சாம்பியனாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், ஒரு புள்ளி கூட பெறாத முதல் அணி என்ற மோசமான சாதனையை செய்யும்.