ARTICLE AD BOX
Published : 21 Feb 2025 11:50 AM
Last Updated : 21 Feb 2025 11:50 AM
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 3192 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்குக: அன்புமணி

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 16 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அரசு வேலை என்பதை குதிரைக் கொம்பை விட அரிதாகி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால், அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இன்னொருபுறம் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அதற்காக விண்ணப்பித்து போட்டித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என பல கட்டங்களைக் கடந்து அவர்கள் ஆசிரியர் பணிக்கு கடந்த ஜூலை மாதமே தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கக்கப்படாவில்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக இந்த முறை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கொடுமையானது. 2018 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், முந்தைய ஆட்சியில் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுதி தான் பணியில் சேரமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த அரசாணையை எதிர்த்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.
அதனால் இப்போது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3192 பேரும் இரு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படவுள்ளது என்றும், இப்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப் படவுள்ளது என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகின்றன. இவை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். நிதி நெருக்கடியால் தான் நியமனம் தாமதம் ஆவதாக ஒரு கட்டத்தில் செய்திகள் வெளியான நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாக செய்திகள் வெளியாயின. அதன்பின்னரும் 3 மாதங்களாகி விட்ட நிலையில், இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது நியாயம் அல்ல.
எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோல், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2768 பேரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் விடைத் தாள்களை திருத்தும் பணி இன்னும் தொடங்காத நிலையில், அவற்றை உடனடியாகத் திருத்தி தகுதியான தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை