ARTICLE AD BOX
Published : 17 Mar 2025 08:28 PM
Last Updated : 17 Mar 2025 08:28 PM
தமிழக எல்லை அருகே அச்சுறுத்திய புலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வனத் துறையினர்!

குமுளி: கேரளாவில் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத் துறையினர் இன்று (மார்ச் 17) மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களை புலி தாக்கத் தொடங்கியதால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புலி அதே இடத்தில் இறந்தது.
தமிழக கேரள எல்லையான குமுளி அருகே வண்டிப்பெரியாறு அரணக்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக புலி நடமாட்டம் இருந்து வந்தது. அவ்வப்போது ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் கொன்றது. புலியைப் பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் மூலமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.புலியைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு அரணக்கல் தோட்டப் பகுதிக்கு புலி வந்தது. அங்கு நாராயணன் என்பவருக்கு சொந்தமான பசுவையும், பாலமுருகன் என்பவர் வளர்த்துவந்த நாயையும் தாக்கி கொன்றது. இதனைத் தொடர்ந்து வனத்துறை புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்கான தேடுதலில் ஈடுபட்ட போது புலி வேறு பகுதிக்குச் சென்று விட்டது. இந்நிலையில், தேக்கடியில் இருந்து ஜெபி எனும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இன்று (மார்ச் 17) மதியம் கிரம்பி எஸ்டேட் அருகே 16-வது டிவிஷனில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புலி பதுங்கி இருந்தது தெரிய வந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் என்.அனுராஜ் தலைமையிலான குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தேயிலை செடிகள் மறைத்திருந்ததால் இதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 15 மீட்டர் தூரத்தில் இருந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
ஆனால், குறி தவறியதால் மீண்டும் இரண்டாவது முறைாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதை உறுதி செய்ய அருகில் சென்றபோது மருத்துவர் அனுராஜை புலி தாக்க முயன்றது.அப்போது வனச்சரகர் மனு தடுக்க முயன்றார். இதில் மனுவினுடைய பாதுகாப்பு ஹெல்மெட் உடைந்தது. தொடர்ந்து மற்றவர்களையும் தாக்க முயன்றதால் வனத்துறையினர் துப்பாக்கியால் புலியை சுட்டனர். இதில் புலி அதே இடத்தில் இறந்தது.
இதனைத் தொடர்ந்து தேக்கடி வனவிலங்கு சரணாலய மருத்துவமனைக்கு புலியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. புலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஸ் கூறுகையில், “இறந்தது பெண் புலி. சுமார் 10 வயது இருக்கலாம். வன ஊழியர்களை தாக்க தொடங்கியதால் பாதுகாப்பு கருதி சுட வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை