ARTICLE AD BOX
Published : 23 Feb 2025 12:28 PM
Last Updated : 23 Feb 2025 12:28 PM
சாம்பியன்ஸ் டிராபியில் ஆட தகுதியானது தானா இங்கிலாந்து?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்றவுடனேயே கிரிக்கெட் உலகம் முழுதும் பாகிஸ்தானுக்கு எதிரான பொதுப்புத்தி கட்டுமானங்கள் பரவலாகி வந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அங்கு நியூஸிலாந்திடம் தோற்றுப் போனது அடுத்த துரதிர்ஷ்டம். இன்று இந்தியாவை வெல்லா விட்டால் வெளியே என்ற நெருக்கடி உள்ளது.
ஆனால், இங்கிலாந்து போன்ற அணிகள் வெளிநாடுகளில் மோசமாக ஆடும் அணி என்ற அடைமொழியைத் தக்க வைத்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 350 ரன்களை எடுத்து தோற்க முடியும் என்றால், அது வேறு அணிகள் என்றால் பரவாயில்லை, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட், ஆதில் ரஷீத் பிரைடன் கார்ஸ் என்றெல்லாம் அவர்கள் மொழியில் ஜாம்பவான் பவுலர்களை வைத்துக் கொண்டு தோற்க முடியும் என்றால், அது இங்கிலாந்தினால் மட்டுமே முடியும்.
எந்த நாட்டுக்கு ட்ராவல் செய்தாலும் அங்கு உணவு சரியில்லை, மைதானம், பிளாட் பிட்ச், வெயில், பயிற்சி வசதி இல்லை, பவுலர்கள் ரன் - அப் ஓடி வரும் இடம் சரியில்லை என்று ஏதாவது மேட்டுக்குடித் தனமாகப் பேசிக்கொண்டு தோல்வியைத் தோல்வியாகவே கருதாமல், அது ஏதோ நடத்தும் நாட்டின் தோல்வி என்பதுபோல் காட்டுபவர்கள்தான் இங்கிலாந்து முன்னாள் - இந்நாள் வீரர்கள், அந்நாட்டு ஊடகங்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
பென் டக்கெட் போன்ற ஒரு வீரர் சாதனையான 165 ரன்களை அடித்து விட்டு வெற்றிக்கான இன்னிங்ஸ் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு இங்கிலாந்து அணி பட்லரால் மோசமாக வழி நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த் கூறுவது போல் இங்கிலாந்து ‘பொட்லம்’ டீம்தான். படுமந்தமான இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை ஜாஷ் இங்க்லிஷ் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று 86 பந்துகளில் 120 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். இதில் அலெக்ஸ் கேரிக்கு (69) கேட்ச் வேறு டிராப்.
டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம்மிழக்க 27/2 என்ற நிலையிலிருந்து 23-வது ஓவரில் மேத்யூ ஷார்ட் (63) அவுட் ஆகும்போது 4/136 என்று இருந்தது ஆஸ்திரேலியா. இடையே மார்னஸ் லபுஷேன் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆகவே 216 ரன்களை 28 ஓவர்களில் ஆஸ்திரேலியா எடுக்க வேண்டும், 6 விக்கெட்டுகள்தான் கையில் உள்ளது. இந்த நேரத்தில் இங்கிலாந்தின் பாடி லாங்குவேஜ், கள வியூகம், பட்லரின் கேப்டன்சி, வேகப்பந்து வீச்சின் மந்தத் தன்மை வெளிப்படையாகத் தெரிந்தது.
அலெக்ஸ் கேரியும், ஜாஷ் இங்லிசும் 19 ஓவர்களில் 146 ரன்கள் குவித்தது ஆட்டத்தின் திருப்பு முனையானது. போதாக்குறைக்கு மேக்ஸ்வெல் இறங்கி 15 பந்துகளில் 32 ரன்கள் என் இவரும் இங்லிசும் சேர்ந்து மார்க் உட், ஆர்ச்சர் பந்துகளை உரித்து எடுத்துவிட்டனர். மார்க் உட் 75 ரன்களையும் ஆர்ச்சர் 82 ரன்களையும் பிரைடன் கார்ஸ் 8 ஓவர்களில் 69 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இங்லிஸையோ, கேரியையோ வீழ்த்த எந்த ஒரு உத்தியையும் கடைப்பிடிக்கவில்லை. அலட்சியமாக ஆடி அசட்டுப் பெருமையுடன் தோற்றது இங்கிலாந்து.
இங்கிலாந்தின் மனநிலை: கிரிக்கெட்டை அவர்கள்தான் கண்டுப்பிடித்தார்கள், ஆனால் அது பிற்பாடு உலகம் முழுதும் பரவத் தொடங்கி இங்கிலாந்தின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து இன்று அந்த அணி இது போன்ற தொடர்களுக்குத் தேவையா என்ற கேள்வி எழும் அளவுக்கு வீழ்ச்சியடையக் காரணம், அவர்களது அந்த மேட்டுக் குடி மனநிலை.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 தொடர் ஒருநாள் தோல்விகளைச் சந்தித்தது, இந்தியாவுக்கு எதிராக டி20, ஒரு நாள் தொடர் இரண்டிலும் படுமட்டமாக ஆடி தோற்கிறது, ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை என்றால் என்ன பொருள்?
‘எங்களிடம் பெரிய கிரிக்கெட் மரபு இருக்கிறது, அதற்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமில்லை, இப்போதைய கிரிக்கெட்டெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி... இதில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் நாங்கள் நாங்கள்தான்’ என்ற ஒரு மேட்டிமை மெத்தனப் போக்கே இங்கிலாந்தின் மனக் கட்டமைப்பாக உள்ளது.
இந்த ஒருநாள், டி20 வந்து கிரிக்கெட்டை சீரழித்து விட்டது, இதில் தோல்வி அடைவதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்ற ஒரு விதமான எலைட்டிஸ்ட், மேட்டுக்குடி புருவம் தூக்கி நிலப்பிரபுத்துவ, ஜமீந்தாரிய மனநிலையே காரணம். டி20-ஐ நாங்கள்தான் கண்டுப்பிடித்தோம், ஆனால் இன்று அது கிரிக்கெட்டையே நாசம் செய்து விட்டது, எதையும் தாங்கள் செய்யும் வரை உன்னதமாக இருப்பது என்றும், அது பரவி இவர்கள் அதிகாரத்தையே கவிழ்க்கும் போது அது மட்டமான கிரிக்கெட் என்றும் சீரழிவு என்றும் உள்ள ஒரு விதமான மேட்டுக்குடி மன நிலை. இந்திய மேட்டுக்குடி மக்களிடையே கூட வேறு விதங்களில் இதே மனநிலையை நாம் பார்க்கலாம்.
வெளியே இலங்கை, இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட இங்கிலாந்து தகுதி பெற்று ஆடும் விதம் தகுதிபெறுவதற்கு உரியதுதானா என்ற கேள்வியையே எழுப்புகிறது.
அவர்களைப் பொறுத்தவரை உலகக் கோப்பை கூட ஒன்றுமில்லைதான், ஆஷஸ் தொடர் தவிர அவர்கள் வேறு எதையும் கிரிக்கெட்டாக மதிக்க மாட்டார்கள். அங்கும் போய் செம உதை வாங்கினாலும் சரி, மற்ற நாட்டுக் கிரிக்கெட்டை மதிப்போம், கவனமாக ஆடி ஃபைட் செய்வோம் என்றெல்லாம் அங்கு யோசிக்க மாட்டார்கள். இத்தகைய மேட்டுக்குடி மனநிலை இருக்கும் வரை இங்கிலாந்து எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இப்படித்தான்.
ஐசிசி தொடர் மட்டுமல்ல இருதரப்பு தொடர்களிலும் தோல்வி மேல் தோல்வி அடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இத்தகைய மனநிலையை மாற்றும் வரை, மாற்றிக் கொள்ளும் வரை பிரெண்டன் மெக்கல்லம் என்ன அவரது தாத்தா வந்தாலும் இங்கிலாந்தை ஒன்றும் தேற்றி விட முடியாது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “2015 முதல் நான் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறேன்” - ஷமி ஓபன் டாக்
- அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ அணிகள் சாம்பியன்!
- ரன் சேஸில் வரலாறு படைத்த ஆஸி: இங்கிலாந்தை விளாசிய ஜாஷ் இங்கிலிஸ் | சாம்பியன்ஸ் டிராபி