ஒற்றுமையின் ‘மகா யாகம்’ நிறைவடைந்தது - மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 27 Feb 2025 01:28 PM
Last Updated : 27 Feb 2025 01:28 PM

ஒற்றுமையின் ‘மகா யாகம்’ நிறைவடைந்தது - மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

மகா கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி | கோப்புப் படம்
<?php // } ?>

புதுடெல்லி: "மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. மகா கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா நேற்றுடன் (பிப். 26) நிறைவடைந்தது. இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற ஒற்றுமை மகா கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது! மகா கும்பாபிஷேகம் முடிந்த பிறகு என் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுத முயற்சித்தேன்.

மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வெறும் சாதனை மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வலுவாகவும் வளமாகவும் வைத்திருக்க வலுவான அடித்தளத்தை அது அமைத்துள்ளது.

இன்று, உலகம் முழுவதிலுமிருந்து வரும் மேலாண்மை வல்லுநர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை நிபுணர்களுக்கான ஆராய்ச்சிப் பொருளாக பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மாறியுள்ளது.

இன்று, தனது பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படும் இந்தியா, புதிய சக்தியுடன் முன்னேறி வருகிறது. இது சகாப்த மாற்றத்தின் ஒலி, இது நாட்டிற்கு ஒரு புதிய எதிர்காலத்தை எழுதப் போகிறது.

இந்த மகா கும்பமேளாவில் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும், சமூகத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் ஒன்று கூடினர். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற மறக்க முடியாத காட்சி, கோடிக்கணக்கான நாட்டு மக்களிடையே தன்னம்பிக்கையின் ஒரு பெரிய திருவிழாவாக மாறியது.

இந்த ஒற்றுமை மகா கும்பமேளாவை வெற்றியடையச் செய்ய நாட்டு மக்கள் அளித்த கடின உழைப்பு, முயற்சிகள் மற்றும் உறுதியால் நான் ஈர்க்கப்பட்டு, பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதல் ஜோதிர்லிங்கமான ஸ்ரீ சோமநாதரைத் தரிசிக்கச் செல்கிறேன். பக்தியின் அடையாளமாக சங்கல்ப மலரை அர்ப்பணிப்பதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்காகவும் நான் பிரார்த்தனை செய்வேன். நாட்டு மக்களிடையே இந்த ஒற்றுமையின் தடையற்ற ஓட்டம் தொடர்ந்து பாய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா சிறப்புகள்: 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற மகா கும்பமேளா புனிதமான மாபெரும் விழாவாகும். உலகின் பிரமாண்டமான, அமைதியான, ஒன்று கூடல், கோடிக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைத்தது. தங்களின் பாவங்களை நீக்கி ஆன்மீக விடுதலைப் பெறுவதற்கு பக்தர்கள் புனித நதிகளில் நீராடினார்கள். கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் இந்தப் புனித நீராடல் நடைபெற்றது. 45 நாட்களில், 45 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட பக்தர்களின் வருகை அதிகரித்து நிறைவு நாளில் 66 கோடியை எட்டியது.

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் தவிர அனுமன் கோவில், அலோபி தேவி ஆலயம், மங்கமேஸ்வர் கோயில் போன்ற தொன்மையான கோயில்களும், அசோகர் ஸ்தூபி, அலகாபாத் பல்கலைக்கழகம், சுவராஜ் பவன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் யாத்ரீகர்களைக் கவர்ந்தன. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட காலாகிராம் எனப்படும் கலாச்சாரக் கிராமம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், கலை, கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சிகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருந்தன.

துறவிகளின் முகாம்களில், தியானம், விவாதங்கள், தத்துவ உரையாடல்கள் ஆகியவை இடம்பெற்றன. யாத்ரீகர்களுக்கு உரிய தகவல்களை அவ்வப்போது வழங்குவதற்கு டிஜிட்டல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ரோன் அணிவகுப்பு வானத்தில் விதவிதமான வடிவங்களை உருவாக்கி பக்தர்களை மெய்மறக்கச் செய்தது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிப்ரவரி 7 முதல் 10-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கலாச்சார விருந்தை சமர்ப்பித்தனர். பாவங்களைப் போக்கவும் மோட்சத்தை அடையவும் வழி வகுப்பதாக நம்பப்படும் ஷாஹி ஸ்னான் என்னும் முக்கிய சடங்கை முன்னிட்டு லட்சக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். புனித கங்கை நதிக்கு ஒளிரும் விளக்குகளை காணிக்கையாக்கி வழிபடும் உலகப் பிரசித்தி பெற்ற கங்கை ஆரத்தி, திரளான பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது.

ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள், கூடாரங்களை அமைத்து மகா கும்பமேளா நடைபெற்ற பகுதி, தற்காலிக நகரமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அலைகடலென திரண்டு வந்திருந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கும்பமேளா பகுதியைச் சுற்றி சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட கண்காணிப்பின் வாயிலாக கும்பமேளா பகுதி முழுவதும் ஏழடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. துணை ராணுவப் படையினர், 14,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 50,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன், 2,750 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தடையற்ற போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய பிரயாக்ராஜ் மற்றும் அதை ஒட்டிய பிராந்தியங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகையைக் கையாள இந்திய ரயில்வே மிகப் பெரிய அளவில் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜிக்கு தேவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ 1000 ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி) ஆகியவற்றைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் முக்கிய நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். ட்ரோன்கள், உயர்தர தொழில்நுட்பத்திலான கண்காணிப்பு கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டன.

இந்தியக் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர். இவர்களுடன், விளையாட்டு வீரர்களான சாய்னா நேவால், சுரேஷ் ரெய்னா, காளி என்ற தலிப் சிங் ராணா, பிரபல கவிஞரான குமார் விஷ்வாஸ், பிரபல நடன இயக்குனர் ரெமோ டி'சோசா, இந்தி திரைப்பட நடிகைகள் கத்ரீனா கைஃப், ரவீனா டாண்டன் உள்ளிட்டோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள். மகா கும்பமேளா முடிவுக்கு வந்தாலும், அது வரலாற்றில் ஒரு நீங்காத முத்திரையை பதித்துவிட்டே சென்றுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article