எப்படி இருந்தது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய தருணம்? - ஒரு நெகிழ்ச்சி அனுபவம்

5 hours ago
ARTICLE AD BOX

Published : 19 Mar 2025 10:11 AM
Last Updated : 19 Mar 2025 10:11 AM

எப்படி இருந்தது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய தருணம்? - ஒரு நெகிழ்ச்சி அனுபவம்

<?php // } ?>

286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆகும் தருணத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்தன. அந்த ஸ்பால்ஷ் டவுன் வெற்றிகரமாக அமைந்து அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் வெளியே வந்த தருணத்தில் அவர்களின் கையசைவுகளும், புன்னகைகளும் உலகளவில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கடத்தியது என்றே கூறலாம்.

இந்தியாவின் மகளே என்று பிரதமர் மோடி சிலாகித்ததும், குஜராத்தில் சுனிதா வில்லியம்ஸின் பூர்வீக கிராமமான ஜுலாசனில் பட்டாசுகள், இனிப்பு, ஆட்டம் பாட்டு எனக் களைகட்டிய கொண்டாட்டமும் அந்தத் தருணத்தை உணர்வுபூர்வமாக்கின. அறிவியல் சாதனை பெருக்கெடுத்த அன்பினால் நெகிழ்ச்சியான ஆன தருணமாக அது அமைந்தது எனலாம்.

இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இதனாலேயே அவர் ‘ஸ்டார் ஆஸ்ட்ரோனட்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அத்தனை கவனமும் அவர் மீதே குவிகிறது. அவர் சாதனையில் இந்தியாவும் பெருமைப் பட்டுக்கொள்கிறது.

8 நாட்கள் பயணம் 9 மாதங்கள் ஆனது ஏன்? - கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். அவர்களின் திட்டம் 8 நாட்கள் அங்கு இருந்து ஆய்வுகளை மேற்கொள்வது. ஆனால் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. 8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது இதனால் தான். இந்த 286 நாட்களில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர். ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.

இந்நிலையில் எலான் மஸ்க், முந்தைய பைடன் அரசு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினரை மீட்க எந்தவித நடவடிக்கையும் முறையாக எடுக்கவில்லை என்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் கூறவில்லை.

அரசியல் காரணமா? - பொதுவாகவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வதும், புதிய வீரர்கள் ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு திரும்புவதும் வழக்கம். இப்படித்தான் சுனிதாவும், வில்மோரும் அங்கு சென்றனர். இப்போது அவர்கள் பூமிக்குத் திரும்பிய நிலையில் புதிய குழுவினர் ஐஎஸ்எஸ் விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, சுனிதாவும், வில்மோரும் அங்கே சிக்கிக் கொண்டார்கள் என்று சொல்வதற்குப் பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் வரவேற்பு: ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினார். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக் கொண்ட வீரர்களை ட்ரம்ப் பத்திரமாக மீட்டுக் கொண்டுவந்துள்ளார். நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கும் எலான் மஸ்குக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 45 நாட்கள்... - தொடர்ச்சியாக பல மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டதால் கை, கால் செயல்பாடுகளில் சிரமம், தலை சுற்றல், தசை சிதைவு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு விண்வெளி வீரர்கள் ஆளாகக்கூடும் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் ஹூஸ்டனில் உள்ள நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் குடும்பத்தினரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் 45 நாட்கள் வரை அந்த மருத்துவமனையிலேயே தங்கி மறுவாழ்வு சிகிச்சைகளைப் பெறுவர்.

சுனிதா பூமிக்குத் திரும்பிய தருணம் குறித்து அவரது உறவினர் தினேஷ் ராவல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “நேற்றுவரை எனக்குப் பதற்றமாகவே இருந்தது. சுனிதாவை பூமியில் பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். இறைவன் எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு சுனிதாவை பத்திரமாக அழைட்துவரச் செய்துள்ளார்” என்றார்.

ராஜ்நாத் சிங் பாராட்டு... - “சுனிதா வில்லியம்ஸின் வியத்தகு பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராட்ட குணம் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கும். அவர் பாதுகாப்பாக திரும்புவது விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகுக்கும் ஒரு கொண்டாட்ட தருணம். அவரது துணிச்சலும், சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படச் செய்கிறது” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அந்த இந்தியத் தொடர்பு... - அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த இந்தியரான தீபக் பாண்ட்யாவுக்கும் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உர்சுலின் போனிக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் கடைக்குட்டிதான் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவைக் குறிக்கும் விதமாக சமோசாவையும் ஸ்லோவேனியாவைச் சுட்டும் வகையில் அந்த நாட்டுக் கொடியையும் விண்வெளிக்கு சுனிதா எடுத்துச் சென்றார். அந்த இந்தியத் தொடர்பு தான் சுனிதாவை இந்தியர்கள் கொண்டாடக் காரணமாகியுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article