ARTICLE AD BOX
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று கண்ணியமாக வெளியேறி இருக்கலாம். ஆனால், அதை விடுத்து வீண் பிடிவாதமாக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என அடம் பிடித்து நீண்ட காலத்திற்குப் பின் ரஞ்சி டிராபி போட்டியில் ஆடினார்.
ஆனால், ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடி வெறும் மூன்று ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்தது அவமானம் அல்ல, ஆனால் அவர் மூன்று ரன்னில் அவுட் ஆனவுடன் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஏமாற்றத்துடன் புலம்பிக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினர். அந்த காட்சி ரோஹித் சர்மாவின் மோசமான சூழ்நிலையை சுட்டிக் காட்டுவதாக அமைந்தது.
2024 - 25 முதல் தர கிரிக்கெட் சீசனில் ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடி 16 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 10.43 என்பதாக உள்ளது. இதன் மூலம் 19 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் சந்திக்காத மோசமான பேட்டிங் சராசரியை ரோஹித் சர்மா பெற்று இருக்கிறார்.
மேலும், உலக அளவில் 2006 ஆம் ஆண்டு முதல், முதல் தர கிரிக்கெட்டில் ஒரு சீசனில் மிக மோசமான பேட்டிங் சராசரியை பெற்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆசிப் ஹமீது என்பவர் 2018 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் சீசனில் 18 இன்னிங்ஸ்களில் ஆடி 9.44 என்ற மோசமான பேட்டிங் சராசரியை வைத்திருந்தார்.
பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எகிறிய ரோஹித் சர்மா.. சமாளித்த அஜித் அகர்கர்.. என்ன நடந்தது?
அதற்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மாவின் 10.43 என்ற குறைந்த பேட்டிங் சராசரி இடம் பெற்று இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் ஆடினால் தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ கறாராக கூறியதால் தான் ரோஹித் சர்மா பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார். ஆனால் தனது முதல் ஆட்டத்திலேயே அவர் 3 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்திருக்கிறார். இனி அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினமே.