இந்தியாவில் மட்டுமல்ல...உலகிலேயே இந்த 9 இடங்களில் பெண்களுக்கு அனுமதி கிடையாது

6 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் உள்ள பல புனித தலங்கள், மரபுகள் மற்றும் சமூகக் கோட்பாடுகள் காரணமாக பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது மதம், பாரம்பரியம், கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு கட்டுப்பாடுகளால் நடைபெறுகிறது. காலங்கள் மாறினாலும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் மாற்றப்படாமல் இருக்கும் உலகின் பிரபலமான 9 இடங்கள் பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.

1. ஓமினே மலை, ஜப்பான்

ஜப்பானின் நாரா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான புனித மலை ஆகும். இது யமபுஷி சுவுகேண்டோ புத்த மத யோகிகள் கடுமையான தியான பயிற்சி மேற்கொள்வதால் நியோன்கின்கின என்ற பாரம்பரிய நம்பிக்கை காரணமாக பெண்கள் இந்த மலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

2. கார்த்திகேயர் கோவில், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில், புஷ்கர் நகரத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் அரிய முருகன் கோவில் ஆகும். புராணக் கதைகளின்படி, திருப்புகழ் மற்றும் ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கார்த்திகேயர் திருமண வாழ்க்கையை துறந்து, இந்த இடத்தில் தவம் இருந்ததாக நம்பப்படுகிறது. அதனால், இக்கோவிலுக்கு பெண்கள் வருகை தந்தால் அவரது தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்ற பழமையான நம்பிக்கையின் அடிப்படையில், இந்த கோவிலுக்குள் பெண்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

3. ஹாஜி அலி தர்கா, மும்பை

மும்பை அரேபிக் கடலுக்குள் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா ஒரு பிரசித்திபெற்ற இஸ்லாமிய தர்கா, இது செய்யித் பீர் ஹாஜி அலி ஷாக் பகவி என்ற மகான் மரணத்திற்குப் பிறகு, அவரது நினைவிடமாக உருவாக்கப்பட்டது. இந்த தர்காவிற்கு பெண்கள் மத ரீதியான காரணங்களால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் 2016-ல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தர்காவிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Sabarimala Temple

4. சபரிமலை, கேரளா:

ஆன்மீகத்திற்கும், சமத்துவத்திற்கும் அடையாளமாக விளங்கும், சபரிமலை ஐயப்பன் கோவில் உலகின் மிக முக்கியமான யாத்திரை தலங்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் தவநெறிகள், கடினமான பயணம், மற்றும் அவர்களின் எளிமை இக்கோவிலின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. மேலும் ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரி என்பதால், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.ஆனால் 2018-ல் இந்திய உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது, ஆனால் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

5. மவுண்ட் அத்தோஸ், கிரீஸ்:

மவுண்ட் அதோஸ் என்பது கிரீஸ் நாட்டின் மிகப்பெரிய புனித தலங்களில் ஒன்று. இந்த மலையானது 20 பெரிய புனித கிறித்தவ மடங்களைக் கொண்டிருப்பதால், கிரீஸ் நாட்டின் கிறித்தவ மரபுகளின்படி, இந்த மலையில் வாழும் அனைத்து உயிரனங்களும் ஆண்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பழங்காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் இங்கு பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் சார்ந்த எந்தவொரு உயிரினமும் அங்குச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

6. ஓகினோஷிமா தீவு , ஜப்பான்:

ஜப்பான் கடலில் அமைந்துள்ள ஒகினோஷிமா தீவு ஜப்பானின் மிகப்பெரிய புனித தீவுகளில் ஒன்றாகும். ஜப்பானியர்களின் பாரம்பரிய மதமான ஷின்டோ மதத்தில், பெண்களுக்கு இயற்கையாக நடைபெறும் மாதவிடாய் காரணமாக அவர்கள் தூய்மையற்றவர்களாக (Impurity) கருதப்படுதால் இந்த தீவிற்கு பெண்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளனர்.

7. மவுண்ட் கிர்னார், இந்தியா:

மவுண்ட் கிர்னார் குஜராத்தின் ஜுனாகத் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஹிந்து மற்றும் ஜைன மதத்தின் முக்கியமான தீர்த்த ஸ்தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக, தத்தாத்ரேயர் தவம் செய்த இடமாக கருதப்படும் மலை உச்சியில் உள்ள கோவிலில் சிரேஷ்ட யோகிகள் மற்றும் சாதுக்கள் தவம் செய்ததாக நம்பப்படுவதாலும், பிரம்மச்சரிய வழிபாடு அனுசரிக்கப்படுவதாலும், திருமண வயதிலுள்ள பெண்கள், அங்கு செல்லக்கூடாது என்பதாக பழங்கால நம்பிக்கை உள்ளது.

8. ஈரானின் கால்பந்து விளையாட்டு அரங்கங்கள்:

ஈரானில், 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, பெண்கள் பொது விளையாட்டு அரங்குகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. பெரும்பாலான ஸ்டேடியங்களில், ஆண்கள் பயன்படுத்தும் மொழி, நடத்தை, மற்றும் உடை போன்றவை பெண்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதாலும், ஆண்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் பெண்கள் இருப்பது அவர்களின் மத உணர்விற்கு எதிராக இருக்கும் என்பதாலும் பொது விளையாட்டு அரங்குகளுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

9. சிங்கனாப்பூர் சனி கோவில், மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் சிங்கப்பூர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாத வழக்கம் 400 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஐந்தரை அடியில் சுயம்புவாக சனி பகவான் காட்சி தரும் இந்த கோவில் 2016ம் ஆண்டு பெண்களை அனுமதிக்கும் படி போராட்டம் நடத்தப்பட்டது. பெண்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டதால் அதற்கு பிறகு பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்

Read more about: women
Read Entire Article