ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 05:50 AM
Last Updated : 18 Mar 2025 05:50 AM
அதிமுக கொண்டுவந்த பேரவை தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி: சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் பேரவை தலைவர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 16 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கடிதம் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று பேரவையில் இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானம், கேள்வி நேரம் ஆகியவை முடிந்த பிறகு, அதிமுகவினரின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுப்பதாக பேரவை தலைவர் அப்பாவு கூறினார். முதலில், அதற்கு இசைவு அளிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினார். 35 உறுப்பினர்கள் இசைவு அளித்ததை தொடர்ந்து, தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கலாம் என அறிவித்தார்.
தனக்கு எதிரான தீர்மானம் என்பதால், பேரவை அலுவல்களை துணை தலைவர் பிச்சாண்டி மேற்கொள்வார் என்று அறிவித்துவிட்டு, பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். அதைத் தொடர்ந்து, பேரவையை நடத்திய பிச்சாண்டி, பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
தீர்மானத்தை ஆர்.பி.உதயகுமார் முன்மொழிய, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். பிறகு, ஆர்.பி.உதயகுமாரை துணை தலைவர் பேச அழைத்தார். முதலில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பேச அனுமதிக்குமாறு உதயகுமார் கோர, பிச்சாண்டி அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, பழனிசாமி பேசியதாவது: 100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் நடுநிலை தவறாத பலர், சட்டப்பேரவை தலைவர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். பேரவை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால்தான், பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து இந்த நாற்காலியில் அமர வைக்கின்றனர். அவர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி நடுநிலையோடு நடக்க வேண்டும். ஒருதலைபட்சமாக செயல்படாமல், அனைத்து உறுப்பினரையும் சமமாக கருத வேண்டும்.
ஆனால், பல்வேறு நிகழ்வுகளில் பேரவை தலைவர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். நாங்கள், மக்களின் பிரச்சினைகளை பேசும்போது, அவரிடம் இருந்து பல்வேறு குறுக்கீடுகள், இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மக்கள் பிரச்சினைகளை இங்கு முழுமையாக பேச முடியவில்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், சுமார் 400 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், 116 நாட்கள்தான் நடந்துள்ளது. நான்கைந்து துறைகளின் மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் முடிக்கின்றனர். இதில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எப்படி விரிவாக பேசமுடியும்.
சில நேரங்களில், எதிர்க்கட்சியினர் பேசுவது முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை. கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தபோது, அதிமுகவினர் அமர்ந்திருந்த பகுதியையே ஒளிபரப்பு செய்யாமல், இருட்டடிப்பு செய்தவர் பேரவை தலைவர். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேசுவதை ஒளிபரப்பாமல், முதல்வர், அமைச்சர்கள் அதற்கு பதில் அளிப்பதை ஒளிபரப்பினால், இவர்கள் எதற்கு பதில் அளிக்கிறார்கள் என்று மக்களுக்கு எப்படி தெரியும். பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வலியுறுத்தி நாங்கள் பலமுறை வெளிநடப்பு செய்தும், பேரவை தலைவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்கள் பேசுவது தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இது ஒருதலைபட்சம் ஆகும். எனவே, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இதைத் தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராக செல்வபெருந்தகை (காங்கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர். ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து, தீர்மானம் மீது பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, குரல் வாக்கெடுப்பு நடத்தினார். தீர்மானத்துக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு அதிகமாகவும் பதிவானதால், தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்தார். ‘‘எதிர்க்கட்சி தலைவர் கோரியதால் அடுத்து டிவிஷன் (பிரிவு) வாக்கெடுப்பும் நடைபெறும்’’ என்றும் கூறினார். அவரது உத்தரவுப்படி, அழைப்பு மணியை பேரவை செயலர் கி.சீனிவாசன் 3 முறை ஒலிக்க செய்ததும், பேரவையின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டன. பின்னர் டிவிஷன் முறையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பிலும் தீர்மானத்தை எதிர்ப்பவர்களே அதிகம் இருந்ததால் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்தார்.
‘‘குரல் வாக்கெடுப்பு மீண்டும் மறுக்கப்பட்டுள்ளதால், எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெறும். உறுப்பினர்கள் அவரவர் இருக்கையிலேயே இருக்க வேண்டும். பேரவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்படும்’’ என அறிவித்தார். தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என பகுதி வாரியாக எழுந்து நிற்குமாறு அழைத்தார். எழுந்து நிற்பவர்களின் பெயர்களை பேரவை செயலர் படித்தார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, ‘‘அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 63 பேர் ஆதரித்துள்ளனர். 154 பேர் எதிர்த்துள்ளனர். நடுநிலை வகித்தோர் யாரும் இல்லை. எதிர்த்தவர்கள் அதிகமாக இருப்பதால், தீர்மானம் தோல்வியடைந்தது’’ என்று பேரவை துணை தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. பேரவை தலைவர் அப்பாவு வெளியே சென்றதால், துணை தலைவர் பிச்சாண்டி வாக்கெடுப்பை நடத்தினார். அதனால், எஞ்சிய 232 பேரில் 63 பேர் தீர்மானத்துக்கு ஆதரவும், 154 பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க பாஜக உறுப்பினர்கள் முன்கூட்டியே புறப்பட்டு சென்றுவிட்டனர். பாமகவினர் நேற்று அவைக்கு வரவில்லை. அவர்கள் உட்பட 15 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் - ட்ரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
- கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில்
- மார்ச் 21 வரை வெப்பநிலை அதிகரிக்காது: வானிலை ஆய்வு மையம் தகவல்
- ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு; இளநிலை உதவியாளர், விஏஓ பதவிக்கு 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு